/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடுப்பணை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தடுப்பணை அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 16, 2024 04:55 AM
மதுரை : தேனி மாவட்டம் வாலையாறு குறுக்கே தடுப்பணை அமைக்க தமிழக அரசு சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பூதிப்புரம் காந்தசொரூபன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பூதிப்புரம், வாழையாத்துபட்டி, ஆதிப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கொப்புரங்கன்பட்டி, வலையபட்டி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. கிணற்று நீரை நம்பி மக்கள் விவசாயம் செய்கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்றுவிட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியை வாலையாறு கடந்து செல்கிறது. இதன் குறுக்கே தடுப்பணை அமைத்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நீர்வளத்துறை செயலர், பொதுப்பணித்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். கழுவத்தேவர்படுகை அருகே வாழையாறு குறுக்கே தடுப்பணை அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: ரூ.25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கும் சாத்தியக்கூறு பற்றி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிந்துரைத்துள்ளார். தலைமை பொறியாளர் சில விபரங்கள் கோரியுள்ளார். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: அரசு சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.