/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தாருக்கு நெஞ்சுவலி
/
ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற தாசில்தாருக்கு நெஞ்சுவலி
ADDED : மே 28, 2024 11:01 PM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டியில் பெட்ரோல் பங்க் அமைக்க, மதுரையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தடையில்லா சான்று கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாசில்தார் காதர் ஷெரீப், தடையில்லா சான்று தர, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார்.
போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை, 6:15 மணிக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சுப்பிரமணியன் பணத்தை கொடுத்த போது, பணத்தை அருகில் உள்ள மேஜை டிராயரில் வைத்து செல்ல தாசில்தார் அறிவுறுத்தினார்.
பின், சம்பந்தப்பட்ட கோப்பில் கையெழுத்து போட முயன்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையின் போது, தாசில்தார் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கினார். அவரை போலீசார் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அலுவலகத்தில் இருந்த ஆர்.ஐ., காதர் உசேன், உதவியாளர்கள் சங்கர், நாகராஜன் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.