/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காய்கறி வணிக வளாகம் அமையுமா
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காய்கறி வணிக வளாகம் அமையுமா
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காய்கறி வணிக வளாகம் அமையுமா
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காய்கறி வணிக வளாகம் அமையுமா
ADDED : ஜூன் 27, 2024 04:49 AM
சின்னமனூர் : சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் மொத்த காய்கறி வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சின்னமனூரில் ஹைவேவிஸ் செல்லும் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் 12 ஏக்கர் பரப்பில் உள்ளது. இது வேளாண் வணிக துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 5 ஏக்கர் நிலத்தை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு வழங்கினர். அங்கு இரு துறைகளுக்கும் உதவி இயக்குனர் அலுவலகங்கள் கட்டி செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில் சமீபத்தில் தோட்டக்கலைத்துறை 500 சதுர மீட்டர் பரப்பில் நிழற் வளை கூடம் அமைத்தது. அதாவது கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுகளை வளர்த்து விவசாயிகள் பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு செல்வதற்கு பதில் சின்னமனூரில் வாங்கி கொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் மா , கொய்யா போன்ற நாற்றுகளும் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில் வேளாண் வணிக துறையினர் மொத்த காய்கறி விற்பனை வளாகம் இந்த வளாகத்தில் அமைக்க கடந்தாண்டு அதற்கான பணிகள் துவங்கியது. இங்கு சுமார் 70 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் தோட்டக் கலைத்துறையினர் நர்சரி அமைத்துள்ள இடத்தை வழங்க மறுத்தனர். இரு துறைகளுக்கும் இடையே எழுந்த மோதலில், கலெக்டர் ஷஜீவனா தலையிட்டு, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் காலி இடங்கள் எத்தனை ஏக்கர் உள்ளது என்பதை கண்டறிய சர்வேயர்களை, அளவீடு செய்யும் பணிசெய்ய உத்தரவிட்டார். நர்சரியும் வேண்டும், மொத்த காய்கறி வணிக வளாகமும் வேண்டும் என்று கலெக்டர் கூறியிருந்தார். ஆனால் கடந்த ஓராண்டிற்கும் மேலாகியும் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மொத்த காய்கறி வணிக வளாகம் கட்ட அரசு உத்தரவிட வேண்டும்.