sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொத்து கொத்தாய் காய்கறிகள்: செழித்து வளர்ந்த மூலிகைச் செடிகள் வீட்டுத் தோட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதி

/

கொத்து கொத்தாய் காய்கறிகள்: செழித்து வளர்ந்த மூலிகைச் செடிகள் வீட்டுத் தோட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதி

கொத்து கொத்தாய் காய்கறிகள்: செழித்து வளர்ந்த மூலிகைச் செடிகள் வீட்டுத் தோட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதி

கொத்து கொத்தாய் காய்கறிகள்: செழித்து வளர்ந்த மூலிகைச் செடிகள் வீட்டுத் தோட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதி


ADDED : மார் 10, 2025 05:42 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டுத் தோட்டம் அமைத்து இயற்கை சாகுபடியில் பழங்கள், பூக்கள், மூலிகை, கீரைகள், சமையலுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே அறுவடை செய்து, பிறரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் போடி புதுக்காலனியில் வசிக்கும் வினோத்குமார், சரண்யா தம்பதி.

இவர்கள் காய்கறி கழிவுகளை வீணாக்காமல் தொட்டியில் போட்டு, மக்க வைத்து வீட்டிலேயே உரமாக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

பசுமைத் தோட்டமாக மாறி உள்ள இவர்களது வீட்டில் நுழைந்தவுடன் நம்மை பூத்து குலுங்கும் பூக்கள் வரவேற்கின்றன. நறுமணம் கமலும் மூலிகைச் செடிகள், சுவையை அறிய துாண்டும் மாதுளை, எலுமிச்சை, சீதா, கொய்யா பழங்கள் காய்த்துள்ளன.

இங்கு பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக தேன் சிட்டு, ஸ்டிச்சிங் பேர்ட், சிட்டுக் குருவி உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வீட்டுத் தோட்டத்தை அமைத்துள்ளனர்.

இந்த வீட்டு தோட்டத்தில் துாதுவளை, துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி, பிரண்டை, ஓமவள்ளி, கருந்துளசி, வில்வம், மருதாணி, குப்பைமேனி, புதினா, கறிவேப்பிலை, வெங்காயம் உள்ளிட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.

காய்கறிகளில் சுரைக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ், முருங்கைக்காயும், மஞ்சள் சேமக் கிழங்கு, கீரைகளில் அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மிளகு தக்காளியும், மாதுளை, சீதா, எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழமும், பூக்களில் மூன்று வண்ணங்களில் செம்பருத்தி, அரளி, மல்லி, கனகாம்பரம், ரோஜா, பிரம்ம கமலம் பூக்கள் மட்டுமின்றி வீட்டின் முன்பாக அழகு தொடர்பான செடிகள் வளர்த்து உள்ளனர்.

மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது


சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர், போடி: தோட்டங்களில் காய்கறி, கீரை, பூக்கள் வளர்ப்பதில் எனது மாமியார் கோமதி மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார்.

அந்த ஆர்வம் ஏற்பட்டு, மாமியார் கொடுத்த ஊக்கத்தால் முதலில் வீட்டின் முன்பாக தொட்டிகளில் வளர்த்து வந்தோம். உரிய பாதுகாப்பு இல்லாததால் வீட்டின் வளாக பகுதியில் உள்ள மண் தரை, தொட்டிகளிலும் வளர்த்து வருவதால் நல்ல பலன் கிடைத்து வருகிறது.

காய்கறி, கீரைகள், பூக்களையும் வெளியே வாங்குவது இல்லை. இயற்கை முறையான காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் உள்ளதாகவும், வண்ண வண்ண பூக்களை கண்டும், பூக்களில் உள்ள தேனை உண்ண வரும் வண்டுகள், பறவைகளை காணும் போது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஐந்து ஆண்டுகளாக மூலிகைச் செடிகள், பழங்கள், காய்கறிகள் கீரைகளை பறித்து பயன்படுத்தி வருகின்றோம்.

செயற்கை காய் கறிகளை வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி வீட்டின் முன்பாக உள்ள காலியிடம், மாடி, சிறிய தொட்டிகளில் தோட்டம் அமைக்கலாம்., என்றார்.

இயற்கை உரம் தயாரிப்பு


வினோத்குமார், சுகாதார ஆய்வாளர், ரயில்வே துறை போடி: வீட்டில் 50க்கும் மேற்பட்ட செடிகள் வளர்த்து வருகிறோம். இயற்கை முறையில் பராமரித்து வருகின்றோம்.

காய்கறி கழிவுகள், செடிகளில் உதிர்ந்த இலைகள், மக்கும் கழிவுகள், உதிர்ந்த பூக்களை பெரிய சிமெண்ட் தொட்டியில் கொட்டி மூடி வைக்கின்றோம்.

35 நாட்களுக்கு மேலாக மக்க வைப்பதன் மூலம் இயற்கை உரம் கிடைக்கிறது. வெளியே எவ்வித உரமும் வாங்குவது இல்லை.

இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி, செடிகள் வளர உதவுகின்றன.

வீட்டு தோட்டத்தில் காய்கறி, கீரை, பழம், பூச்செடிகளை வளர்த்தும், அதிக அளவில் அறுவடை செய்து பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியம், உரிய சத்தும் கிடைக்கிறது.

மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதனால் மாத பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கப்பட வேண்டிய சிறு தொகை சேமிக்க பயன்படுகிறது., என்றார்.






      Dinamalar
      Follow us