சாகுபடியை ஊக்குவிக்க தென்னை வாரியம் மானியம் வழங்க வலியுறுத்தல் தேங்காய் விலை குறைவால் பிற சாகுபடிக்கு மாறும் நிலை
சாகுபடியை ஊக்குவிக்க தென்னை வாரியம் மானியம் வழங்க வலியுறுத்தல் தேங்காய் விலை குறைவால் பிற சாகுபடிக்கு மாறும் நிலை
ADDED : ஜூன் 09, 2026 05:01 PM
கம்பம், ஜூன் 10
மானியம் வழங்கி தென்னை சாகுபடியை ஊக்குவிக்க தென்னை வளர்ச்சி வாரியம் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி தோட்டக்கலை மாவட்டமாகும். தென்னை, வாழை, திராட்சை, பழ வகைகள், காய்கறி பயிர்கள் பரவலாக சாகுபடியாகிறது. எல்லா பயிர்களுக்கும் மானிய விலையில் வேளாண் இடுபொருள்கள், ரொக்கம், விதைகள், நாற்றுகள் வழங்கப்படுகிறது. ஆனால் தென்னை சாகுபடிக்கு குறிப்பிடும் அளவிற்கு திட்டங்கள் இல்லை. கொச்சியில் உள்ள மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் இடு பொருள்கள், தென்னங்கன்றுகளை வழங்குகிறது. மேலும் தென்னந்தோப்பு விரிவாக்கத்திற்கு ரூ.15 ஆயிரம் எக்டேருக்கு வழங்குகின்றனர். பல்வேறு திட்டங்களை தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தி வருகிறது. தேனி தென்னை சாகுபடி பரப்பில் முதல் இடம் பெறுகிறது. தற்போது போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஆயிரக்கணக்கான எக்டேரில் தென்னை சாகுபடி செய்தும் விலைக்கும், சாகுபடி செலவுகளுக்கும் வித்தியாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி, வேறு சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
தென்னை விவசாயிகள் கூறியதாவது: தென்னை நடவு செய்த 5 ஆண்டுகளில் பலன் தரும். ஆண்டிற்கு 2 முறை உரம் வைப்பது, மரம் பழுது பார்ப்பது, வெட்டு கூலி, காவல் சம்பளம் என செலவிற்கும், வருவாய்க்கும் வித்தியாசம் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள வாடல் நோய் தாக்கி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டினோம். இந்தாண்டு வாடல் நோய் பெரிய அளவில் பிரச்னை இல்லை. தொடர்ந்து விலை கட்டுப்படியாகாத நிலை உள்ளது. எனவே சாகுபடி பரப்பு குறையாமல் பாதுகாக்க தென்னை வளர்ச்சி வாரியம், விவசாயிகளுக்கு கன்றுகள், இடுபொருள்கள், பராமரிப்பு செலவுகளுக்கென மானியம் தரவேண்டும். குறிப்பாக தேங்காய்களை கொள்முதல் செய்ய உதவிட வேண்டும்என்றனர்.
