/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த மல்லிகை
/
விளைச்சல் குறைவால் விலை உயர்ந்த மல்லிகை
ADDED : ஜூன் 16, 2024 01:55 AM
ஆண்டிபட்டி:சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்கள் விளைச்சல் குறைவால் கிலோ ரூ.1200 வரை விற்றது.
ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனுார், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தக்கோயில், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, சித்தார்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது.
மழை, பனி, அதிகப்படியான காற்று மல்லிகை விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். வெயில் காலங்களில் விளைச்சல் அதிகம் கிடைக்கும்.
கடந்த சில மாதங்களில் வாட்டி வதைத்த வெயிலால் பூக்கள் விளைச்சல் அதிகம் இருந்தது. சமீபத்தில் பெய்த மழை அதனை தொடர்ந்து தற்போது வீசும் காற்றால் விளைச்சல் பாதித்துள்ளது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததால் ஆண்டிபட்டியில் நேற்று மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1200 வரை விற்றது.
பூக்கள் மொத்த வியாபாரி ஆண்டிபட்டி சாந்தி கூறியதாவது:
சீசன் காலத்தில் சில வாரங்களுக்கு முன் ஆண்டிப்பட்டியில் தினமும் 6 டன் வரை மல்லிகை பூக்கள் வரத்து இருந்தது.
தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தினமும் 100 கிலோ அளவு கூட வரத்து இல்லை.
வெளியூர்களுக்கும், சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கும் குறைந்த விலைக்கு அனுப்பப்பட்ட நிலை மாறி தற்போது உள்ளூர் தேவைக்கே பற்றாக்குறையாக உள்ளது என்றார்.