/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுத்தீயில் புல்மேடுகள், காடுகள் எரிந்து சேதம்
/
காட்டுத்தீயில் புல்மேடுகள், காடுகள் எரிந்து சேதம்
ADDED : ஏப் 10, 2024 06:27 AM

மூணாறு : மூணாறு அருகே மலை மீது பரவிய காட்டு தீயில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் புல்மேடுகள், காடுகள் ஆகியவை எரிந்து சேதமாகியது.
மூணாறில் கோடை காலம் துவங்கியதால் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வறட்சியுடன் புல்மேடுகள், காடுகள் ஆகியவை கருகிய நிலையில் உள்ளன. அவற்றில் அடிக்கடி காட்டு தீ பரவி வருகிறது. கோடை காலத்தில் கால்நடைகளின் தீவனத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவும் என்பதால் சிலர் புல்மேடுகளை தீ வைப்பது வாடிக்கை. கடந்த ஒரு மாதமாக பல பகுதிகளில் பரவிய காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் தினமும் பல முறை 'சைரன்' ஒலி எழுப்பிய வண்ணம் செல்வதால் பதட்டமான சூழல் நிலவியது.
இந்நிலையில் மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் ஆனைமுடி பகுதியில் நேற்று முன்தினம் பகலில் மலை மீது பரவிய காட்டு தீ மாலையில் மறு பகுதியில் கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதி மலையில் வேகமாக பரவியது.
அதிகாலை 12:00 மணி வரை பற்றி எரிந்த தீயில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் புல் மேடுகள், காடுகள் ஆகியவை எரிந்து சேதமாகின.
அப்பகுதியில் காட்டு தீ பரவுவதற்கு முன்பு மலை அடிவாரத்தில் தேயிலை தோட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. மலை மீது தீ பரவியதை பார்த்த யானைகள் மாயமாகின.

