/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
/
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
தெருவை இரண்டாக பிரித்து சாக்கடை அமைத்ததால் அவதி; ஊஞ்சாம்பட்டி ஊராட்சி,டெலிபோன் நகரில் அலறும் பொதுமக்கள்
ADDED : ஜூலை 17, 2024 12:19 AM

தேனி : தேனி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி டெலிபோன் நகர் கிழக்கு தெருவில் சாக்கடை அமைத்து ஒரே தெருவை இரண்டாக பிரித்து மக்களை அவதிக்குள்ளாக்கி உள்ளது ஊராட்சி நிர்வாகம். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இப்பகுதியில் குடியிருப்போர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 10,11வது வார்டில் டெலிபோன் நகர் கிழக்கு தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 150க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இப் பகுதி குடியிருப்போர் மாதவன், சூரியராஜ், மொக்கைசாமி, சுரேஸ்பாபு ஆகியோர் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:
டெலிபோன் நகர் கிழக்கு தெருவில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். ஆனால் ரோடு வசதி, கழிவு நீர் செல்ல சாக்கடை வசதி அமைத்து தரவில்லை. தெருவிற்கு பொம்மையகவுண்டன்பட்டி, சுக்குவாடன்பட்டியில் இருந்து வரும் வகையில் பாதை உள்ளது. ஊராட்சியில் பலமுறை ரோடு, கழிவுநீர் சாக்கடை அமைத்து தர வலியுறுத்தினோம். அமைத்து தரவில்லை. தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து வலியுறுத்தியதின் பேரில் சாக்கடை, ரோடு அமைத்து தருவதாக அதிகாரிகள், ஊராட்சி தலைவர், செயலாளர் தெரிவித்தனர். கடந்த ஏப்., மாதத்தில் சாக்கடை அமைக்கும் பணி துவங்கியது. பணிகளை பார்வையிட்ட துணை பி.டி.ஓ., சாக்கடை பணி முடிந்ததும் ரோடு அமைப்பதாக தெரிவித்தார். ஆனால், சாக்கடை முறையாக அமைக்கவில்லை. இதனால் மேடு பள்ளமாக உள்ளது. சாக்கடை பணி முடிந்த சில வாரங்களிலேயே சேதமடைந்து பின் சீரமைக்கப்பட்டது. இதனால் கழிவு நீர் செல்லாமல் பல இடங்களில் தேங்கி உள்ளது. குறிப்பாக சுக்குவாடன்பட்டியில் இருந்து வரும் கழிவு நீர் இந்த சாக்கடையில் தேங்குவது தொடர்கிறது. இதனை சுத்தம் செய்து தர கூறினாலும். ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை. பல இடங்களில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்போர் பாதிக்கப்படுகின்றனர்.
தெரு பள்ளம், சாக்கடை உயரம்
சாக்கடை அமைக்கும் போது தெருவின் மைய பகுதியில் 3அடி உயரத்திற்கு அமைத்து விட்டனர். ஆனால் இன்று வரை ரோடு அமைக்க வில்லை. இதனால் தெருவின் ஒரு பகுதியினர் பொம்மையகவுண்டன்பட்டி வழியாகவும், மறுபகுதியினர் சுக்குவாடன்பட்டி வழியாகவும் மெயின்ரோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. ரோடு அமைக்காததால் சிறிய மழை பெய்தாலே மண் ரோடு சகதியாக மாறி பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதனால் முதியோர் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். ஆபத்திற்கு கூட தெவிற்குள் ஆட்டோக்கள் வர முடியவில்லை. ரோடு அமைக்காததால் ஆம்புலன்ஸ் வருவது கூட சிரமமாக உள்ளது.இது ஒரு புறம் இருக்க விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவதும் தொடர்கிறது. இதனால் குழந்தைகளுடன் வசிக்கும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு
ஊராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குழாய் இணைப்பில் குடிநீர் வழங்குவது இல்லை. இதனால் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் இரவில் தெருவிளக்குகளும் சரிவர எரிவதில்லை. தெருநாய் தொல்லைகளும் அதிகம் உள்ளது. ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க மின்வாரியத்திடம் கூறினாலும் நடவடிக்கை இல்லை. இப்பகுதிக்கு சிமென்ட் ரோடு அமைக்கவும், கழிவு நீர் சாக்கடையை சீரமைத்து கட்டித்தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பகுதியில் ஊராட்சி சார்பில் திட்ட பணிகள் நடக்காமல் பணிகள் நிறைவடைந்ததாக பலகை வைப்பதும் தொடர்கிறது. குழாய் பதிக்காமல் அந்த பணி நிறைவடைந்ததாக பலகை வைத்துள்ளனர். தற்போதும் ரோடு அமைக்காமல் திட்டம் நிறைவடைந்ததாக பலகை வைக்கவந்தவர்களை திருப்பி அனுப்பி விட்டோம் என்றனர்.