/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தாததால் கழிவுநீரை பருகும் அவலம் -கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மக்கள் குமுறல்
/
சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தாததால் கழிவுநீரை பருகும் அவலம் -கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மக்கள் குமுறல்
சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தாததால் கழிவுநீரை பருகும் அவலம் -கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மக்கள் குமுறல்
சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தாததால் கழிவுநீரை பருகும் அவலம் -கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மக்கள் குமுறல்
ADDED : மே 19, 2024 05:31 AM

கூடலுார் : கூடலுார் நகராட்சி சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்ததாததால் கழிவுநீர் கலந்து வரும் குடிநீரை பொதுமக்கள் பருகி பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
கூடலுார் அருகே கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் 6300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 9 வார்டுகள் அடங்கிய இக்கிராமத்தில் நடுத்தெரு, பிள்ளையார் கோயில் தெரு, அரச மர தெரு, இந்திரா காலனி என மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளாக உள்ளன. முல்லைப் பெரியாற்றில் உரை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் பம்பிங் செய்து மேல்நிலைத் தொட்டியில் தேக்கி, அங்கிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மக்கள் ஆற்றில் நேரடியாக தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் கருநாக்கமுத்தன்பட்டி அருகிலுள்ள முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. தற்போது பெரியாறு அணையில் 100 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இதில் கழிவுநீர் கலந்து ஓடுகிறது. இதனை குடிநீராக பயன்படுத்தும் மக்கள் தொடர்ந்து பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
சுத்திகரிப்பு திட்ட நிதி வீண்
கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்த பின் ஆற்றில் கலக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நிதி வீணானது. இதனால் தொடர்ந்து கழிவு நீரை குடிநீராக குடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கழிவு நீரை குடிக்கும் அவலம்
பாண்டியன், கருநாக்கமுத்தன்பட்டி: தினந்தோறும் விவசாய வேலைக்காக முல்லை பெரியாற்றிற்கு அருகில் வரும் போதெல்லாம் கழிவுநீர் கலப்பதை பார்க்க முடிகிறது.
அதனால் வீடுகளில் சப்ளையாகும் குடிநீரை குடிக்க மனம் வரவில்லை. ஒரு மனிதன் வாழ்வதற்கு முக்கியமானது குடிநீராகும். மோசமான நிலையில் கழிவு நீருடன் கலந்து வரும் குடிநீரை தொடர்ந்து குடித்து மக்கள் பலர் பலியாகும் அவலம் உள்ளது. குடிநீருக்கு முக்கியம் கொடுத்து விரைவாக தீர்வு காண ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை
மாரியம்மாள், கருநாக்கமுத்தன்பட்டி:
கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து சுத்தமான குடிநீர் சப்ளை செய்வோம் என ஓட்டு கேட்கும் போது ஊராட்சித் தலைவர் உறுதிமொழி கொடுத்தார். 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நடக்கவில்லை. ஆங்கூர்பாளையத்திற்கு தெற்கு பகுதியில் பழைய குளம் இருந்தது. அதை சீரமைத்து தண்ணீரை தேக்கி சப்ளை செய்தாலே சுகாதாரமான குடிநீர் சப்ளை செய்ய முடியும்.
முற்றுகை போராட்டம் நடத்துவோம்
மொக்கப்பன், ஊராட்சித் தலைவர்:
முல்லைப் பெரியாற்றில் கூடலுார் நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் கலப்பது குறித்து பலமுறை கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளேன். அதன் அடிப்படையில் அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்துள்ளனர். நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் சுத்திகரிப்பு நிலையம் மட்டும் இதுவரை அமைக்கவில்லை. அதனால் கருநாக்கமுத்தன்பட்டியில் வசிக்கும் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி கூடலுார் நகராட்சி அலுவலகத்தை விரைவில் முற்றுகையிட உள்ளோம்.

