/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு இல்லாததால் விபத்தில் சிக்கும் மலைவாழ் மக்கள்; தேனி எம்.பி., கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
ரோடு இல்லாததால் விபத்தில் சிக்கும் மலைவாழ் மக்கள்; தேனி எம்.பி., கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ரோடு இல்லாததால் விபத்தில் சிக்கும் மலைவாழ் மக்கள்; தேனி எம்.பி., கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ரோடு இல்லாததால் விபத்தில் சிக்கும் மலைவாழ் மக்கள்; தேனி எம்.பி., கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2024 06:30 AM
பெரியகுளம் : சின்னுார், பெரியூர் மலை கிராமப் பகுதியில் ரோடு வசதி இல்லாததால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரியகுளம் கல்லாற்றை கடந்து செல்லும் போது அவ்வப்போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுவது தொடர்வதால் இதற்கு பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பெரியகுளத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கல்லாறு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னூர், பெரியூர் மலைப் பகுதியில் பெய்யும் மழையும், பேக்கோம்பை சிற்றாறும் கலந்து கல்லாறாக உருவாகிறது. கல்லாற்றிலிருந்து செல்லும் தண்ணீர் பெரியகுளம் வடகரை பகுதி கண்மாய்களுக்கு செல்கிறது.
கொடைக்கானல் தாலுகா, வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர், கடப்பாரை குழி பகுதியில் 1,500 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். எலுமிச்சை, நார்த்தங்காய், அவகோடா உள்ளிட்ட மலைப் பயிர்களை பயிரிட்டும், பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மலைப் பகுதியில் 3200 மீட்டருக்கு ரோடு வசதி இல்லை. இதனால் தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லாற்றை கடந்து பெரியகுளம் பகுதிக்கு வரவேண்டிய நிலை உள்ளது. பெரியகுளம் பகுதிகளில் விளைப் பொருட்களை விற்பனை செய்வதற்கும், உறவினர்கள் வீடு, மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் வரவேண்டும். இவர்கள் மழை காலங்களில் அவ்வப்போது கல்லாற்றில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்குவதும், தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
ரோடு வசதி அவசியம்
பிச்சை, சின்னுார்: சின்னுார் உட்கடை மலை கிராமத்தில் இருந்து மருத்துவமனை, மளிகைப் பொருட்கள், உறவினர்களை பார்க்கவும், ரோடு வசதி இல்லாததால் கல்லாற்றை கடந்து பெரியகுளம் வர வேண்டிய சூழல் நீண்ட நாட்களாக உள்ளது. அப்போது கல்லாற்றில் தண்ணீர் செல்லும் அளவு தெரியாமல் திடீரென காட்டாற்று வெள்ளத்தில் சிக்குகிறோம். விரைவில் எங்கள் பகுதிக்கு ரோடு வசதி அமைத்து தரவேண்டும்.
'டோலி' கட்டி வரும் நிலை
ராஜேஸ்வரி, பெரியூர்: எங்கள் பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை உள்ளது. காய்ச்சல், பிரசவம் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு கல்லாற்றை கடக்கும் போது 'டோலி' கட்டி தூக்கி வரும் நிலை தொடர்கிறது. அந்நேரத்தில் ஒரு உயிரை காப்பாற்ற, பல உயிர்களை பணையம் வைத்து கல்லாற்றை கடந்து வருகிறோம்.
தேர்தல் வந்து விட்டால் ஓட்டு கேட்க வரும் அரசியல் வாதிகள், எங்கள் பகுதிக்கு ரோடு அமைத்துத்தர முன்வர வேண்டும்.', என்றார். இதில் விஷேசம் என்னவெனில் இப்பகுதியில் தேர்தல் நேரங்களில் குதிரையில் வரும் ஓட்டுப்பெட்டி கல்லாற்றை கடந்துதான் சென்று வருகிறது. கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.