/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க விவசாய சங்கம் வலியுறுத்தல்
/
பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க விவசாய சங்கம் வலியுறுத்தல்
பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க விவசாய சங்கம் வலியுறுத்தல்
பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க விவசாய சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2024 08:23 PM

கூடலுார்:லோயர்கேம்ப் அருகே காஞ்சிமரத்துறையில் அனுமதியின்றி இயங்கி வரும் பெரியாறு புலிகள் காப்பக அலுவலகத்திற்கு உடனடியாக 'சீல்' வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்ட எல்லையை ஒட்டி கேரளாவில் பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகம் மூலம் தேக்கடியில் டிரக்கிங், யானை சவாரி, படகு சவாரி ஆகியன நடந்து வருகின்றன. இதனால், ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
மேலும் வருவாயை பெருக்கும் வகையில் வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு மாட்டு வண்டி சவாரி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இதற்கான அலுவலகத்தை தமிழகப் பகுதியான லோயர்கேம்ப் அருகே காஞ்சிமரத்துறையில் துவக்கி மாட்டு வண்டி மூலம் திராட்சைத் தோட்டங்கள், பளியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகிறது.
கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகம் எவ்வித அனுமதியின்றி தமிழகப் பகுதியில் கிளை அலுவலகத்தை செயல்படுத்தி வருவதற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்:
கேரளாவை மையமாகக் கொண்ட பெரியாறு புலிகள் காப்பகம் அத்துமீறி தமிழக பகுதியில் உள்ள லோயர்கேம்ப் காஞ்சிமரத்துறையில் இரண்டு கட்டடங்களை கட்டி, அங்கு கேரள வன ஊழியர்களையும் தங்க வைத்துள்ளனர்.
பெரியாறு அணைக்குச் செல்லும் வழியான தேக்கடி மற்றும் வல்லக்கடவில் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அமைத்து அனுமதியின்றி உள்ளே செல்ல முடியாத வகையில் கெடுபிடியாக உள்ளனர்.
அதே வேளையில் தமிழகப் பகுதிக்குள் எவ்வித அனுமதியுமின்றி கட்டடங்களை கட்டி மாட்டுவண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையினரின் ஆசியோடு செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு உடனடியாக சீல் வைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.