ADDED : ஆக 16, 2024 04:45 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து பெய்த மழையால் மானாவாரி இறவை பாசன நிலங்களை விவசாயிகள் விதைப்புக்கு தயார்படுத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவையும், இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படும்.
ஆடி, ஆவணி மாதங்களில் கிடைக்கும் தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் விதைப்பு பணியை துவக்கி விடுவர்.
கடந்த சில மாதத்திற்கு முன் கோடையில் பெய்த மழைக்குப் பின் நிலங்களில் உழவு செய்து உரமிட்டு வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து பெய்த மழையால் நிலங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தற்போது விதைப்பு பணிகளை துவக்கி உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தற்போது உள்ள சூழல் துவரை, மக்காச்சோளம் விதைப்புக்கு ஏற்றதாக உள்ளது.
தற்போது மானாவாரியில் விதைக்கப்படும் பயிர்கள் மூன்று முதல் நான்கு மாதங்களில் கிடைக்கும் மழையால் பலன் கொடுத்து விடும் என்றனர்.