/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுந்தாள் உரங்கள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
பசுந்தாள் உரங்கள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2024 03:56 AM
பெரியகுளம், : பெரியகுளம் வட்டாரத்தில் பசுந்தாள் உரங்கள் வழங்காமல் வேளாண்துறை தாமதப்படுத்தி வருகிறது. விரைவில் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசு மண் வளம் காக்க 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் பசுந்தாள் உரம் மானிய விலையில் வழங்கி வருகிறது. மண்ணில் கரிம, கார்பன் உள்ளிட்ட அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி, பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதனால் மகசூல் அதிகரிக்கும்.
எனவே இயற்கை உரமான பசுந்தாள் உரங்களான தக்கை பூண்டு, சனப்பு பயிர்கள் இடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் இரு மாதங்களாக பெய்த மழையால் மண்ணில் ஈரத்தன்மை நல்ல நிலையில் உள்ளது.
ஒரு கிலோ தக்கை பூண்டு ரூ.105 விலையில் மானிய விலையில் கிலோ ரூ.50 க்கும் வழங்கப்படும். ஆனால் பெரியகுளம் வட்டாரத்தில் பசுந்தாள் உரங்கள் இன்னும் சப்ளை செய்யவில்லை. வேளாண் இணை இயக்குனர் பசுந்தாள் உரம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பெரியகுளம் வேளாண் உதவி இயக்குனர் ரேணுகா கூறுகையில், 'பெரியகுளம் வட்டாத்திற்கு தக்கைப்பூண்டு வரவை எதிர்பார்த்துள்ளோம். வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்', என்றார்.