/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாய்க்காலை துார்வார களம் இறங்கும் விவசாயிகள்
/
வாய்க்காலை துார்வார களம் இறங்கும் விவசாயிகள்
ADDED : மே 16, 2024 06:12 AM
சின்னமனுார் : பொதுப் பணித்துறையை நம்பி கொண்டிருந்தால் இனி பயனில்லை என முடிவு செய்து, பாசன வாய்க்கால்களை சொந்த செலவில் தூர் வார சின்னமனுார் விவசாயிகள் களம் இறங்கி உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலங்களுக்கு தண்ணீரை பகிர்ந்தளிக்க 17 வாய்க்கால்கள் உள்ளன.
வாய்க்கால்களை தூர் வாருவது, சேதமடைந்த மடைகளை சரி செய்வது என்பது பொதுப்பணித் துறையினரால் செய்யப்பட வேண்டிய பணிகளாகும். ஆனால் வாய்க்கால்களை தூர் வாரி பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்.
அனைத்து வாய்க்கால்களுமே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி அடையாளமே மாறி விட்டன. கரைகள் சேதமடைந்துள்ளன. விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. முதல் போகத்திற்கு ஜுன் முதல் தேதி தண்ணீர் திறக்க உள்ளனர். திறக்கப்படும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியாத அளவிற்கு வாய்க்கால்கள் உள்ளன.
இது தொடர்பாக சின்னமனுார் விவசாயிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கானி ( 60 முதல் 70 சென்ட் ) நிலத்திற்கு ரூ.300 என விவசாயிகளுக்கு வரி நிர்ணயம் செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து வரியை பெற்று, சின்னமனுார் சின்ன வாய்க்கால், பெரிய வாய்க்கால் என இரண்டு வாய்க்கால்களையும் தூர் வார முடிவு செய்துள்ளதாக சின்னமனுார் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா தெரிவித்துள்ளார்.