ADDED : ஜூலை 25, 2024 04:58 AM
தேனி: மாவட்டத்தில் பயன்பாடில்லாத குவாரிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலம் வேலி அமைக்க கனிம வளத்துறையினர் பரிந்துறை செய்துள்ளனர்.
மாவட்டத்தில் பருவமழை காலங்களில் பயன்பாடில்லாத குவாரிகளில் மழைநீர் தேங்குகிறது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குளிப்பதும், நீச்சல் தெரியாதவர்கள் தேங்கிய நீரில் முழ்கி இறந்து போவதும் தொடர்ந்தது.
இந்நிலையில் பயன்பாட்டில்லாத குவாரிகளை சுற்றி வேலி அமைக்க கனிமவளத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பயன்பாடில்லாத குவாரிகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
முதற்கட்டமாக ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்பட்டியில் 5, சண்முகசுந்தரபுரத்தில் 3 என 8 குவாரிகள் கைவிடப்பட்ட குவாரிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த குவாரிகளை சுற்றி யாரும் உள்ளே செல்லாத வகையில் வேலி அமைக்க ஊரக வளர்ச்சித்துறைக்கு கனிம வளத்துறையினர் பரிந்துறை செய்துள்ளனர். வேலி அமைக்கும் பணியை விரைந்து மேற்கொண்டால் உயிரிழப்புகளை தடுக்கஇயலும்.