ADDED : ஆக 11, 2024 04:59 AM

தேனி : தேனி பெரியகுளம் ரோட்டில் பொம்மையகவுண்டன்பட்டி அருகே ரோட்டோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் அப்பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி அடைகின்றனர்.
தேனி பெரியகுளம் ரோட்டில் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து உள்ளன.இந்த ரோட்டில் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அன்னஞ்சி விலக்கு வரையிலான பகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது என்பதால் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது.
இதனை பயன்படுத்தி பிராய்லர் கோழி இறைச்சி கடைகாரர்கள், ரோட்டோரத்தில் இறைச்சி கழிவு, குப்பை கொட்டி செல்கின்றனர். இதனை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில்லை. தெருநாய்கள் குப்பை, கழிவுகளை ரோட்டில் வாரி விடுகின்றன.
இறைச்சி கழிவுகளை உண்பதற்காக தெருநாய்கள் அதிகளவில் அப்பகுதியில் திரிகின்றன. இவை திடீரென ரோட்டை கடந்து ஓட முயலும் போது டூவீலர்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். மேலும் இறைச்சிகழிவுகளில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்வோர் சிரமம் அடைகின்றனர். அன்னஞ்சி விலக்கு முதல் பொம்மைய கவுண்டன்பட்டி வரை ரோட்டோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.