/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.99.50 லட்சம் மோசடி; நிதி நிறுவன மேலாளர் கைது
/
ரூ.99.50 லட்சம் மோசடி; நிதி நிறுவன மேலாளர் கைது
ADDED : ஆக 12, 2024 11:10 PM

தேனி : தேனி சுக்குவாடன்பட்டி தாய் தமிழ்நாடு அக்ரோ பார்பஸ் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக திருப்பூரைச் சேர்ந்த சரண்யாதேவி, சரவணன், பாலகுமார், தனபால் உள்ளனர். தேனியை சேர்ந்த மணிகண்டன் மேலாளராகவும், அவரது மனைவி கார்த்திகா கணக்காளராகவும், பெரியகுளத்தை சேர்ந்த விஜயன், ராமகிருஷ்ணன் களப்பணியாளராகவும் பணிபுரிந்தனர்.
வட புதுப்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் தெரு பிரேமா, 37, என்பவரிடம், மணிகண்டன் மற்றும் பணியாளர்கள், 'எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தரப்படும்' என்றனர். அதை நம்பி பிரேமா, பல தவணைகளாக, 73.50 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.
முதிர்வு காலம் முடிந்து, பணத்தை பிரேமா திரும்ப கேட்ட போது, மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்தார் என கூறப்படுகிறது. பிரேமா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்த மோசடி நிறுவனம், மேலும் ஏழு பேரிடம் வேலை தருவதாக கூறி, டிபாசிட்டாக 26 லட்சம் ரூபாயை வாங்கியது. இவ்வாறு, 99.50 லட்சம் ரூபாயை நிறுவனம் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இதுதொடர்பாக இயக்குனர்கள் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிகண்டன் ஜூன் 23ல் கைது செய்யப்பட்டார். நேற்று நிறுவன இயக்குனர் தனபாலை, போலீசார் கைது செய்தனர்.

