/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனவிலங்குகள் தாகம் தீர்க்க உதவிய தொடர் மழை
/
வனவிலங்குகள் தாகம் தீர்க்க உதவிய தொடர் மழை
ADDED : செப் 02, 2024 12:11 AM
போடி : போடி பகுதியில் சமீபத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்க வழி பிறந்துள்ளதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.
போடி பகுதியில் போடிமெட்டு, மதிகெட்டான் சோலை மலைப்பகுதி அமைந்துள்ளது. குரங்கணி, கொட்டகுடி, முட்டம், தாவளம், வலசத்துறை, பிச்சாங்கரை, மேலப்பரவு, வடக்குமலை, மரக்காமலை மேல்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் 75 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்., ஆக., செப்டம்பரில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது சமூக விரோத கும்பல், கரிமூட்டம் அமைப்பவர்கள், கால்நடை மேய்ப்பவர்கள் இங்குள்ள மரங்களுக்கு தீ வைப்பது வழக்கம். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் நீர் வரத்து இல்லாத நிலையில் வன விலங்குகள் மலை அடிவார பகுதிகளுக்கு வரத் துவங்கி, விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை அழித்து சேதம் ஏற்படுத்தி வந்தன. வன விலங்குகளால் மனிதர்கள் பலியாகினர். கடந்த சில நாட்களாக கேரளா, போடி, குரங்கணி, கொட்டகுடி, வடக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர் மழையால் வனப்பகுதியில் உள்ள சுனைகளில் நீர் தேங்கி வனப்பகுதி முழுவதும் பசுமையாக மாறி உள்ளன. இதனால் வனத்துறையினர், வன விலங்குகளின் தாகம் தீர்க்க மழை பயன்பட்டுள்ளது என நிம்மதி அடைந்துள்ளனர்.