/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலக்காயில் இரு புதிய ரகங்கள் அறிமுகம்
/
ஏலக்காயில் இரு புதிய ரகங்கள் அறிமுகம்
ADDED : ஆக 14, 2024 01:27 AM
கம்பம்:விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இரண்டு புதிய ரக ஏலக்காய்களை இந்திய நறுமணப்பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஏலக்காய் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சாகுபடியாகிறது. அதில் கேரளா மட்டும் 80 சதவீத உற்பத்தியை பகிர்ந்து கொள்கிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெறும் சாகுபடியில் வழுக்கை அல்லது மைசூர் என்னும் ரகமே இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் நல்லாணி என்ற ரகத்தை அறிமுகம் செய்தார்.
அதற்கு முன்பு இருந்த மைசூர் மற்றும் வழுக்கை ரகங்கள் ஏக்கருக்கு 200 கிலோ மட்டுமே மகசூல் தந்தது.
ஆனால் நல்லாணி ரகம் இன்று வரை சாகுபடியில் கோலோச்சி வருகிறது. இது ஏக்கருக்கு சராசரியாக 500 கிலோ வரையிலும், நன்றாக கவனிப்பு உள்ள தோட்டங்களில் 800 கிலோ வரையிலும் மகசூல் கிடைக்கிறது.
இதற்கிடையே விவசாயிகளே 8 எம்.எம். 9 எம்.எம். மற்றும் சுந்தரி உள்ளிட்ட ரகங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் அங்கமாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் நறுமண பொருள் ஆராய்ச்சி மையம் சார்பில் காவேரி மற்றும் மனுஸ்ரீ என்ற இரண்டு புதிய ஏல ரகங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
கடந்த வாரம் பிரதமர் வெளியிட்ட 109 புதிய வேளாண், தோட்டக்கலை, நறுமணப் பொருள் ரகங்களில் இந்த இரண்டு ஏலக்காய் ரகங்களும் உள்ளன.
இதில் காவேரி என்ற ரகம் கர்நாடகா, மனு ஸ்ரீ ரகம் கேரளாவிற்கு நன்றாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இவை ஈரத்தன்மையை தாங்கி வளரக் கூடியது. ஏக்கருக்கு 550 கிலோ மகசூல் வரை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.