/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத வாரச்சந்தை தேவதானப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடி கட்டடம் வீணாகும் அவலம்
/
3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத வாரச்சந்தை தேவதானப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடி கட்டடம் வீணாகும் அவலம்
3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத வாரச்சந்தை தேவதானப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடி கட்டடம் வீணாகும் அவலம்
3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத வாரச்சந்தை தேவதானப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடி கட்டடம் வீணாகும் அவலம்
ADDED : ஆக 11, 2024 05:05 AM

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் வாரச்சந்தையில் ரூ. ஒரு கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் காய்கறிகள் வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர்.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி வாரச்சந்தை ஆங்கிலேயர்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நூற்றாண்டை
கடந்த பிரபலமான சந்தை வாரம் தோறும் புதன்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 8:00 வரை வியாபாரம் நடக்கும். இச் சந்தைக்கு தேவதானப்பட்டி அதனை சுற்றியுள்ள சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், மஞ்சளாறு அணை, அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, எ.காமாட்சிபுரம் உட்பட பல கிராமங்களில் இருந்தும் வந்து மக்கள் காய்கறி பலசரக்கு சாமான்களை வாங்கிச் செல்கின்றனர். தேவதானப்பட்டி பேரூராட்சி காலி இடத்தில் மேற்கூரை தார்பாய் அமைத்து 150க்கும் அதிகமான தரைக்கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டது. ஒரு கடைக்கு தரை வாடகையாக வாரம் தோறும் புதன்கிழமையன்று ரூ.500 முதல் ரூ.1200 வரை ரசீது இன்றி வசூலிக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் பணம் வசூலாகும்.
சுண்டைக்காய் முதல் தோசை சட்டி வரை இச் சந்தையில் பெரும்பாலும் விவசாயிகள் நேரடியாக கடைகள் நடத்துகின்றனர். இடைத்தரகர்கள் இல்லாததால் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. சுண்டைக்காய் முதல் பட்டர் பீன்ஸ் வரை அனைத்து வகை காய்கறிகள், மளிகை பொருட்கள், பழ வகைகள், கருவாடு, தோசைசட்டி, வடைச்சட்டி என அனைத்தும் ஒரு கூரையின் கீழ் கிடைக்கிறது. சந்தைநாளில் 20 முதல் 25 டன் காய்கறிகள் விற்பனையும், முகூர்த்த மாதங்களில் கூடுதலாக 10 டன் விற்பனையாகிறது.
வாரசந்தை பல ஆண்டுகளாக மழை, வெயில் என திறந்த வெளியில் தரையில் விளை பொருட்களை கொட்டி வியாபாரம் செய்கின்றனர். மழை பெய்யும் நாட்களில் கடை அமைந்துள்ள பகுதி சேறும், சகதியுடன் காட்சியளிக்கும். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடையில் சகதியில் நடந்து சென்றே காய்கறி வாங்க வேண்டிய அவலம் உள்ளது. இந்த அவல நிலையறிந்து 2019--2020ம் ஆண்டில் தேவதானப்பட்டி பேரூராட்சியில் மூலதனமான்யம் நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் 114 கடைகள் 2021ல் கட்ட முடிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ பணி முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் புதிய கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் வியாபாரிகள் தரையிலேயே பொருட்களை கொட்டி வியாபாரம் செய்யும் அவலம் தொடர்கிறது. மறுபுறம் புதிய கடைகள் கட்டி காட்சிப் பொருளாக உள்ளன. இது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் கூறியதாவது:
ரூ.1 கோடியில் கட்டுமானப்பணி வீண்
தினேஷ், வாடிக்கையாளர், தேவதானப்பட்டி:
தரையில் நடக்கும் வாரச்சந்தையை தரம் உயர்த்துவதற்கு கட்டி முடித்து மூன்றாண்டுகளாகியும் கடைகள் திறக்கப்படவில்லை. மழை காலங்களில் வாரச்சந்தை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. ஏராளமானோர் வழுக்கி விழும் அவலம் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், வயதில் மூத்தவர்கள் சந்தைக்கு வருவதை தவிர்க்கின்றனர்.
சந்தைக்கு அருகே உள்ள சுத்தம் செய்யாத சாக்கடை கால்வாயில் உற்பத்தியாகும் கொசு தொந்தரவு தாங்க முடிவதில்லை, அப்பகுதி சுகாதார கேடாக உள்ளது.
கடைகளைத் திறக்க வேண்டும்
தீபா, வாடிக்கையாளர், தேவதானப்பட்டி:
இச் சந்தையில் வாங்கும் காய்கறிகள், மளிகை சாமான்கள் பத்து நாட்களுக்கு பயன்பாட்டிற்கு வரும். இங்கு தரையில் கொட்டப்பட்டுள்ள காய்கறிகளை எடுப்பதற்கு சிரமமாக உள்ளது. கிராம சபை கூட்டங்களில் விரைவில் புதிய வாரச்சந்தை கட்டடம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கட்டி முடிக்கப்பட்ட புதிய கடைகள் திறக்க வேண்டும்.
கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
சேக்ஒலி, வியாபாரி, தேவதானப்பட்டி:
மானாவரி,இறவை பாசனத்தில் காய்கறி நடவு செய்து, விளையும் காய்கறிகளை அறுவடை செய்து வாரச்சந்தைக்கு கொண்டு வருகிறேன். விவசாயி,வியாபாரியும் நானே என்பதால், குறைந்த விலையில் காய்கறி விற்பதால் அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் விரைவில் புதிய வார சந்தை கட்டடத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்து வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும்.
'விரைவில் திறக்கப்படும்'
பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா கூறுகையில்: அனைத்து வகையான வேலைகள் முடிந்து விட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது. தேவதானப்பட்டி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அந்த கடைக்காரர்களும் வாரச்சந்தையில் கடைகள் கேட்கின்றனர். வாரச்சந்தை வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மீதமிருந்தால் மற்றவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.
தீர்வு அரசின் நோக்கம் நிறைவேற்ற வேண்டும்
தேவதானப்பட்டியில் மக்கள் அதிகளவில் பயன்படும் வாரச்ந்தையில் புதிதாக கட்டி முடித்து 3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் கடைகள் உள்ளன. இதே நிலை நீடித்தால் கடைகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தி பயன்பாடு இன்றி அரசின் நிதி வீணாகி விடும். எனவே, விரைவில் ஏலம் நடத்தி கடைகளளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும்.
--