/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலாவதியாகியும் ஓடும் போலீஸ் வாகனங்களை ஓரங்கட்டுங்க சார்
/
காலாவதியாகியும் ஓடும் போலீஸ் வாகனங்களை ஓரங்கட்டுங்க சார்
காலாவதியாகியும் ஓடும் போலீஸ் வாகனங்களை ஓரங்கட்டுங்க சார்
காலாவதியாகியும் ஓடும் போலீஸ் வாகனங்களை ஓரங்கட்டுங்க சார்
ADDED : ஆக 06, 2024 05:28 AM
தேனி, ஆக. 6- - தேனி மாவட்ட போலீசில் பழுதான 'வஜ்ரா' உட்பட 15 காலாவதி வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்காததால் டிரைவர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது. வாகன பழுது நீக்க மெக்கானிக் இல்லாததால் டிரைவர்கள் சொந்த பணத்தை செலவிடும் அவல நிலை உள்ளது.
இம் மாவட்டத்தின் ஆயுதப்படை வாகன பராமரிப்புப் பிரிவு சார்பில் 220 வாகனங்கள் இயங்குகின்றன. இதில் 123 டூவீலர்கள், 97 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. இவற்றை எஸ்.ஐ.,க்கள், டிராபிக் எஸ்.ஐ.,க்கள், எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் 97 நான்கு சக்கர வாகனங்களில் 15 வாகனங்கள் காலாவதி தேதி முடிந்து, ஓராண்டு ஆன நிலையில் அந்த வாகனங்களை மீண்டும் ஓராண்டுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதுப்பித்து பயன்படுத்தினர். தற்போது அந்த ஓராண்டுக்கான புதுப்பித்தல் தேதியும் 2024 செப்., 30 என நிறைவு பெறுகிறது. 15 வாகனங்களும் ஓட்டை உடைசலோடு இயங்கப்படுகின்றன.
டிரைவர்கள் அச்சம்
காலாவதியான 15 வாகனங்களில் கலவரம் நடந்தால் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், டெம்போ வாகனம், ஜீப் உள்ளிட்டவை அடங்கும். இதனை முறையாக ஏலம் விட்டு, புதிய வாகனங்களை வாங்க டிரைவர்கள் கோருகின்றனர். ஆனால் மாவட்ட காவல்துறை நிர்வாகம் கண்டு கொள்ளாததால் டிரைவர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்குவது தொடர்கிறது.
இந்த வாகனங்களில் அடிக்கடி பிரேக் சூ பழுது, எலக்ட்ரிக்கல் வேலை என அடிக்கடி பழுது ஏற்படுகின்றன. இதனை சீரமைக்க ஆயுதப்படைப் பிரிவில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் சீட்டு பெற்ற டிரைவர்கள், அதனை மதுரையில் அரசு போக்குவரத்து தானியங்கி பணிமனைக்கு கொண்டு சென்றால் அங்கு மெக்கானிக் பணியிடங்கள காலியாக உள்ளது. இதனால் தனியார் மெக்கானிக்குகள் மூலம் டிரைவர்கள் சொந்த பணம் செலவு செய்து பழுதுநீக்குகின்றனர். இதனால் டிரைவர்கள் மெக்கானிக்களுக்கு கட்டணமாக ரூ.1200 வரை வழங்க வேண்டியுள்ளது. போலீஸ் டிரைவர்கள் தங்களது சம்பளத்தில் பாதிக்கு மேல் அரசுவாகன பழுதுநீக்குவதற்காக செலவிட வேண்டியுள்ளது. எனவே, தென் மண்டல ஐ.ஜி., தேனி எஸ்.பி., இவ்விவகாரத்தில் தலையிட்டு 15 வாகனங்களை உடனடியாக ஏலம் விட்டு, புதிய வாகனங்கள், மெக்கானிக் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.