/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் வாரியம் அலட்சியத்தால் அனுப்பப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
/
குடிநீர் வாரியம் அலட்சியத்தால் அனுப்பப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் வாரியம் அலட்சியத்தால் அனுப்பப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் வாரியம் அலட்சியத்தால் அனுப்பப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மே 24, 2024 03:06 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பப்பட்டி ஊராட்சிக்கு பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்ட மூலம், குடிநீர் முழுமையாக சென்று சேராததால் இந்த ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த ஊராட்சிக்குட்பட்ட அனுப்பப்பட்டியில் 60 ஆயிரம் லிட்டர், மேக்கிழார்பட்டியில் 60 ஆயிரம் லிட்டர், ரெங்கராம்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர், அம்பேத்கர் நகரில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டிகள் செயல்படுகிறது. பாலக்கோம்பை குடிநீர் திட்டத்தில் குப்பாம்பட்டி அருகே குடிநீர் உந்து நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. குடிநீர் வாரியம் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு அன்றாடம் அனுப்பப்படும் குடிநீர் குறித்து கண்காணிப்பு இல்லை. குடிநீர் பற்றாக்குறையால் ஊராட்சி நிர்வாகம் மூலம் உள்ளூரில் போர்வெல், பொதுக் கிணறுகளில் கிடைக்கும் நீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: குன்னூர் ஆற்றில் கூடுதல் நீர் வரத்து இருந்தால் உறை கிணறுகள் மூழ்கி பாதித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆற்றில் நீர் வரத்து இல்லாத நாட்களில் உறை கிணறுகளில் நீர் சுரப்பு இல்லை என்று கூறுகின்றனர்.
மொத்தத்தில் குடிநீர் வாரியம் வினியோகத்தில் அக்கறை காட்டவில்லை. தற்போது ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஊராட்சியில் தற்போது செயல்படும் மேல்நிலை தொட்டிகளில் தினமும் ஒரு முறை ஏற்றும் அளவிற்கு வினியோகம் இருந்தாலே குடிநீர் பிரச்சினையை சமாளித்து விடலாம். அதற்கான ஏற்பாடுகளை குடிநீர் வாரியம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.