ADDED : ஜூலை 03, 2024 05:37 AM
உத்தமபாளையம் : மத்திய அரசின் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு திருத்தி அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்ட திருத்தத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு உண்ணாவிரம் நடத்தினர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பார்த்திபன், மற்றொரு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லலிதா தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. முன்னதாக 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாஜிஸ்திரேட் கோர்ட், மாவட்ட உரிமையியல் கோர்ட், சப் கோர்ட்டுகளில் இருந்து பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தேனி: தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன், அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஜூலை 8 வரை நீதிமன்ற புறக்கணித்துள்ளோம். ஜூலை 8 ல் திருச்சியில் ஊர்வலம் நடக்க உள்ளது என்றார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.