/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நல்லாசிரியர்கள் கூட்டணியில் உருவான 'மினி பூங்கா'
/
நல்லாசிரியர்கள் கூட்டணியில் உருவான 'மினி பூங்கா'
ADDED : மார் 03, 2025 07:34 AM
பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் 'அன்னை' இல்லத்தில் நல்லாசிரியர்கள் விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலுச்சாமி. இவரது மனைவி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தமயந்தி. இருவரும் இணைந்து வீட்டில் 'பூக்களின் சங்கமம்', 'பறவைகள்
சரணாலயம்' என்ற பெயரில், 'மினி பூங்கா' அமைத்துள்ளனர். சீத்தாமரம், சரக்கொன்றை, பவளமல்லி, மகிளம், மாதுளை, பிற மரங்களான வேம்பு, வாழை, முருங்கை, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, மருதாணி, நெட்டிலிங்க மரங்கள், செடி வகைகளில் சங்குபூச்செடி, வெற்றிலை, துளசி, கற்றாழை, தொட்டால் சிணுங்கி (சுருங்கி), திருநீற்று பச்சிலை, நாயுருவி, கற்பூரவள்ளி, லில்லி, மணி பிளான்ட், ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, ஜாதிப்பூ, நந்தியாவட்டை, காகிதப்பூ உட்பட அழகுச்செடிகளும் ஏராளமாக பூத்து குலுங்குகின்றன.
ரம்யமாக ஒலிக்கும் சிட்டுக் குருவியின் 'கீச்' குரல்கள்
பாலுச்சாமி, ஓய்வு ஆசிரியர்: நானும், எனது மனைவியும் இணைந்து 20 ஆண்டுகளுக்கு முன் சில செடிகளை நட்டோம். தொடர்ந்து நட்டு வந்ததால் பல்கி பெருகி 'மினி பூங்கா'வாக உருவாக்கினோம்.
பூங்கா அருகிலும், மாடியிலும் சிட்டுக்குருவி, தேன் சிட்டுகள் இளைப்பாற 'ஊஞ்சல் கூண்டுகள்' அமைத்துள்ளோம். பூங்காவில் கொய்யா பழங்களை கொத்தியும், முருங்கை பூவை சுவைக்கும், சிட்டுக்குருவிகளுக்கு தனியாகவும், தேன் சிட்டுகளுக்கு தனியாகவும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் ஆடி கொண்டே 'கீச்' குரலை கேட்கும்போது மனது இதமாகிறது. புதிய ராகம் தினமும் கேட்கும் திருப்தியில் எதையும் சாதிக்கலாம் என, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இவைகளுடன் அணில்கள் பூங்காவில் சுதந்திரமா சுற்றித் திரிகின்றன. பறவை வகைகள் அவ்வப்போது பழங்களை கொத்தி செல்லும். எனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பள்ளி மாணவர்களை அழைத்து இயற்கையின் நேசிப்பை கற்று தருகிறோம்., என்றார்.
மகிழ்வித்து மகிழ்கிறோம்
தமயந்தி, தலைமை ஆசிரியை: பூங்காவில் விளையும் முருங்கை, எலுமிச்சை, தக்காளி, கத்தரி உட்பட அனைத்து காய்கறிகளையும் வீட்டு பயன்பாட்டிற்கு போக, மற்றவர்களுக்கு கொடுக்கின்றோம். அவர்கள், 'உங்கள் பூங்கா காய்கறிகள் அருமை' எனக்கூறுகின்ற ஒற்றைச் சொல்லில் மகிழ்கிறோம். கோயில் திருவிழா காலங்களில் அம்மனுக்கு தண்ணீர் ஊற்ற, அக்னிசட்டிக்கு வேம்பு மர இலைகளை அனைவருக்கும் தருகிறோம். மண்புழு உரம், வாழைப்பழம் தோல், வெங்காய கரைசலை செடிகளுக்கு, மரங்களுக்கு ஊற்றி இயற்கை உரங்களை பயன்படுத்துகிறோம்., என்றார்.