/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லை பெரியாறு அணை விவகாரம் விவசாயிகள் கையெழுத்து இயக்கம்
/
முல்லை பெரியாறு அணை விவகாரம் விவசாயிகள் கையெழுத்து இயக்கம்
முல்லை பெரியாறு அணை விவகாரம் விவசாயிகள் கையெழுத்து இயக்கம்
முல்லை பெரியாறு அணை விவகாரம் விவசாயிகள் கையெழுத்து இயக்கம்
ADDED : மே 30, 2024 01:56 AM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் பிரதமருக்கு, 5 லட்சம் விவசாயிகள் மனு அனுப்ப கையெழுத்து இயக்கம் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் துவங்கியது.
முல்லைப் பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கேரளா ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ஐந்து லட்சம் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று புதிதாக பதவி ஏற்க உள்ள பிரதமருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கையெழுத்து இயக்கம் நேற்று தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் துவக்கப்பட்டது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலர் கதிரவன், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து கூறியதாவது:
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சி செய்கிறது. தேசிய கட்சி ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது.
தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையை மீட்டெடுக்க தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 10 நாட்களில் ஐந்து மாவட்டங்களிலும், 5 லட்சம் விவசாயிகளிடம் மனுவில் கையெழுத்து வாங்கும் பணி நடக்க உள்ளது.
தமிழர் ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஷெரீப், ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் பாண்டியன், செயலர் ரஞ்சித்குமார், பொருளாளர் லோகநாதன், ஆவணப்பட இயக்குனர் தினகரன்ஜெய், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நகரப் பொதுச் செயலர் ராஜிவ், ஒன்றிய செயலர் மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.