/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்: கேரள வனத்துறை சார்பில் புதிய படகு
/
தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்: கேரள வனத்துறை சார்பில் புதிய படகு
தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்: கேரள வனத்துறை சார்பில் புதிய படகு
தேக்கடியில் புதிய சுற்றுலா திட்டம்: கேரள வனத்துறை சார்பில் புதிய படகு
ADDED : ஆக 29, 2024 02:25 AM

கூடலுார்:தேக்கடி புலிகள் சரணாலயத்திற்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையில் புதிய சுற்றுலாத் திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக கேரள வனத்துறை புதிய படகுகள் இயக்குவதற்கு தயாராகி வருகிறது.
தமிழக கேரள எல்லையில் 925 சதுர கி.மீ., பரப்பளவில் தேக்கடி புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உலக வங்கி ஆண்டுதோறும் ரூ.300 கோடி நிதி வழங்கி வருகிறது. தற்போது தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து 8 படகுகள் இயக்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.பல லட்சம் வருவாய் வருகிறது.
புதிய திட்டம்
தற்போது வருவாயை மேலும் பெருக்கும் வகையில் கேரள வனத்துறை சார்பில் சிறப்பு சுற்றுலா திட்டம் புதிதாக துவக்கப்பட்டு இதற்காக புதிய படகுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு திட்டத்தில் வனப் பகுதியில் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கேரள வனத்துறையினர் கூறியதாவது:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய சுற்றுலாத் திட்டம் தேக்கடியில் துவக்கப்பட உள்ளது. இதற்காக 19 பயணிகள் செல்லக்கூடிய வனத்துறையின் இரண்டு பைபர் படகுகள் இயக்கப்படும். அவற்றின் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சிறப்பு படகுகள் காலை 7:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை 7 டிரிப் இயக்கப்படும்.
ஒரு நபருக்கு ரூ.ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ஒரு குடும்பம் அல்லது தனிநபர் படகில் பயணம் செய்யலாம். குடிநீர், சிற்றுண்டி சேவைகள் படகில் வழங்கப்படும்.
பறவை மற்றும் பட்டாம்பூச்சி, வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க வருபவர்களுக்கு சிறப்பு படகு சவாரி பயனளிக்கும்.
சீசனில் படகு டிக்கெட் பெற முடியாத குடும்பங்கள் ரூ.19 ஆயிரம் செலுத்தி சிறப்பு படகு சவாரி செய்யலாம். தேக்கடி ஏரியில் நடுவில் உள்ள லேக் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வனத்துறை கட்டடத்தில் 2 தங்கும் அறைகள் தயாராகி வருகின்றன.
இரண்டு பேர் தங்கக்கூடிய ஒரு அறைக்கு உணவு உட்பட ரூ.5 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தங்க வருபவர்களுக்கு படகுப் பயணம், வனப்பகுதிக்கு ட்ரக்கிங் வியூ பாயிண்ட் பகுதியில் புகைப்படம் எடுக்க வாய்ப்பு இலவசமாக ஏற்படுத்தப்படும். ஓணம் பண்டிகையையொட்டி புதிய சுற்றுலாத் திட்டங்கள் துவங்கப்பட உள்ளதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை புலிகள் சரணாலயத்தின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர், என்றனர்.
தமிழக மக்கள் எதிர்ப்பு
தமிழக பொதுப்பணிதுறை சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக புதிய படகிற்கு அனுமதி பெற முடியாத நிலையில், கேரள வனத்துறை சார்பில் தாராளமாக புதிய படகுகள் இயக்குவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.