/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பெட்டிகளை தயார்நிலையில் வைக்க உத்தரவு
/
ஓட்டுப்பெட்டிகளை தயார்நிலையில் வைக்க உத்தரவு
ADDED : செப் 08, 2024 02:53 AM
தேனி:உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படும் வகையில் ஓட்டுப்பெட்டிகளை தயார் செய்து வைக்க கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக, உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவி காலம் விரைவில் முடிகிறது. அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படும் ஓட்டுப்பெட்டிகளின் தரம், அவற்றின் நிலையை ஆய்வு செய்து பழுதானது, சீரமைத்து பயன்படுத்த கூடியது என இரண்டு வகைகளாக பிரிக்க வேண்டும். ஒரு ஓட்டுப்பெட்டியில் சிறு பழுது நீக்கம், சுத்தம் செய்து எண்ணெய் விடும் பணிக்கு பெட்டிக்கு ரூ.21 வரை செலவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. துருப்பிடித்த பெட்டிகளை வர்ணம் பூசவும், 'லாக் சிஸ்டம்' சரியாக இயங்குவதை உறுதி செய்யவும் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி உள்ள ஓட்டுப்பெட்டிகளை மீண்டும் பெற்று தேர்தலுக்கு தயார் நிலையில் வைத்திடவும் கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.