/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலச்சரிவு அபாயத்தில் தவிக்கும் மக்கள்
/
நிலச்சரிவு அபாயத்தில் தவிக்கும் மக்கள்
ADDED : ஆக 01, 2024 05:50 AM

மூணாறு: மூணாறில் அந்தோணியார் காலனியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக தெரிய வந்தும், அதற்கு நிரந்தர தீர்வு இன்றி 19 ஆண்டுகளாக மக்கள் தவித்து வருகின்றனர்.
மூணாறு நகரை ஒட்டியுள்ள அந்தோணியார் காலனியில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு 2005 ஜூலை 25ல் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட நான்கு பேர் இறந்தனர்.
அப்பகுதியில் புவியியல் வல்லுனர்கள் ஆய்வில் நிலத்தடியில் நீரோட்டம் உள்ளதால், அது மழை காலங்களில் அதிகரித்து நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. அங்கு அமிர்தா விஸ்வ வித்யா பீடம் சார்பில் நில அதிர்வுகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில் கருவி 2009ல் பொருத்தப்பட்டு கொல்லத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் வயர்லெஸ் நெட் ஒர்க் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதன் சிக்னலை வைத்து முன்னெச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை வலுவடையும்போது மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மூணாறில் கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்வதால் ஜூலை 29ல் முன்னெச்சரிக்கை விடப்பட்டு அந்தோணியார் காலனியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம் அல்லது உறவினர் வீடுகள் ஆகியவற்றிற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வெளியேறினர்.
இது போன்று ஆண்டு தோறும் நடப்பதால் அப்பகுதி மக்களின் பணி, மாணவ, மாணவிகளில் கல்வி ஆகியவை பாதிக்கப்படுவதுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால கடந்த 19 ஆண்டுகளாக நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜாக்குலின்மேரி கூறுகையில்., அந்தோணியார் காலனியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. மூணாறில் ஒரு சென்டிலாவது வீடு கட்டி கொடுத்தால் நிம்மதியாக வாழ்வோம். மழை துவங்கி விட்டால் நிவாரண முகாம், உறவினர் வீடு என அலைகழிக்கப்படுவதால் பிள்ளைகளின் படிப்பு, அன்றாட வாழ்க்கை ஆகியவை பாதிக்கப்படுகிறது. மக்களின் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்து அரசு முன்வர வேண்டும், என்றார்.