/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேவை மைய கட்டடம் பயன்பாடு இன்றி சேதமடையும் அவலம் வரதராஜபுரத்தில் அடிப்படை வசதிக்கு அல்லாடும் மக்கள்
/
சேவை மைய கட்டடம் பயன்பாடு இன்றி சேதமடையும் அவலம் வரதராஜபுரத்தில் அடிப்படை வசதிக்கு அல்லாடும் மக்கள்
சேவை மைய கட்டடம் பயன்பாடு இன்றி சேதமடையும் அவலம் வரதராஜபுரத்தில் அடிப்படை வசதிக்கு அல்லாடும் மக்கள்
சேவை மைய கட்டடம் பயன்பாடு இன்றி சேதமடையும் அவலம் வரதராஜபுரத்தில் அடிப்படை வசதிக்கு அல்லாடும் மக்கள்
ADDED : மே 07, 2024 06:08 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து ஊராட்சி வரதராஜபுரத்தில் மக்களுக்கான அடிப்படை தேவைகளை மேம்படுத்த ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கிராமத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். குடிநீரில் தன்னிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் மற்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்துகின்றனர்.
இங்கு 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தரமான நிலையில் இருந்த சிமென்ட் தளம், தார் ரோடு சேதப்படுத்தி தோண்டி குழாய் பதித்து முறையாக சரி செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் தெருக்களில் உருவாகியுள்ள மேடு பள்ளங்கள் பலருக்கும் பாதிக்கப்படுகின்றனர்.
சுத்தம் செய்யாத கழிவு நீர் வடிகால், பொது இடங்களில் குவியும் குப்பையால் சுகாதார பாதிப்பு நிலவுகிறது.
மழைநீர் செல்வதற்காக கிராமத்தின் வழியாக அமைக்கப்பட்ட பெரிய வடிகாலை குப்பை கொட்டும் இடமாக்கியதால் கழிவுநீரீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இவ்வூராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கருத்து:
இடியும் அபாயத்தில் குடியிருப்புகள்
கார்த்திகேயன், வரதராஜபுரம்: வரதராஜபுரத்தில் ஆண், பெண்களுக்கான பொது கழிப்பறை வசதி இல்லை. பலரும் கிராமத்தை ஒட்டிய பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி எதிரில் உள்ள பொது கழிப்பறை தண்ணீர் இன்றி பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
தற்போது கட்டட கழிவுகளையும் குப்பையையும் இப்பகுதியில் கொட்டி பயன்பாடு இல்லாத பொதுக் கழிப்பறை கட்டடத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
புதிய பொதுக் கழிப்பறைகள் அமைக்க ஊராட்சியில் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்காக 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் தற்போது இடிந்து விழுந்த நிலையில் உள்ளது.
இவற்றை பராமரிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இடியும் நிலையில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிதிலமடையும் சேவை மையம்
சிவனேசன், வரதராஜபுரம்: கிராமத்தில் சமுதாயக்கூடம் இல்லாததால் பொது நிகழ்ச்சிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் போதுமானதாக இல்லை.
அக் கட்டிடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கிராமத்தில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி சுடுகாடு வசதி உள்ளது.
ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அடிப்படை வசதி இல்லை. ஆதி திராவிடர்கள் வசிக்கும் தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. பேவர் பிளாக், சிமென்ட் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் காலனியில் இருந்து மெயின்ரோட்டை இணைக்கும் இடத்தில் உள்ள சாக்கடைப்பாலம் இடிந்து விழும் நிலையில் ஆபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டவேண்டும். கிராமத்தில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சேவை மைய கட்டிடம் பயன்பாடு இன்றி சிதிலமடைந்து வருகிறது. புதர் மண்டியுள்ள அப்பகுதியை திறந்த வெளி கடைப்பிடமாக்கி விட்டனர். கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை இல்லை.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: வரதராஜபுரத்தில் சேதம் அடைந்துள்ள தொகுப்பு வீடுகள் நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இல்லை.
சமுதாய கூடம் அமைக்க வாய்ப்பில்லை. பொதுமக்கள் பங்களிப்பில் இடம் ஒதுக்கி தந்தால் சமுதாயக்கூடம் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். பயன்பாடு இல்லாத சேவை மைய கட்டிடத்தை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிக்கடி சுத்தம் செய்தாலும், பொதுமக்கள் அப்பகுதியில் அசுத்தம் செய்கின்றனர்.
மக்கள் ஒத்துழைப்பு இல்லை. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஊராட்சி நிதி நிலைக்கேற்ப மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றனர்.