/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாசன் செட்டிகுளம் துார்வாராததால் மழைநீரை தேக்க முடியாத அவலம் பி.அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு
/
தாசன் செட்டிகுளம் துார்வாராததால் மழைநீரை தேக்க முடியாத அவலம் பி.அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு
தாசன் செட்டிகுளம் துார்வாராததால் மழைநீரை தேக்க முடியாத அவலம் பி.அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு
தாசன் செட்டிகுளம் துார்வாராததால் மழைநீரை தேக்க முடியாத அவலம் பி.அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : ஆக 01, 2024 05:39 AM

போடி: போடி அருகே தாசன் செட்டிகுளம் தூர்வாரப்படாததால் மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தாசன் செட்டிகுளம் கண்மாய். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் குரங்கணி, கொட்டகுடி, அணைப் பிள்ளையார் அணை, ராஜா வாய்க்கால் வழியாக கண்மாய்க்கு வருகிறது. பங்காருசாமி நாயக்கர் கண்மாய் நிரம்பியவுடன் இங்கிருந்து கண்மாய்க்கு தண்ணீர் வரும். இக் கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் 500 ஏக்கர் நேரடியாகவும், 200 ஏக்கருக்கு மேல் மறைமுகமாக பாசனமும், கிணறுகளில் நீரூற்றும் கிடைத்து வருகிறது. கண்மாய் நீர்வரத்து பாதை, கண்மாய் தூர்வாரப்படாததால் மழை நீரை முழுமையாக தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது:
கிராம கமிட்டி சார்பில் வாய்க்கால் துார்வாரியும் பலன் இல்லை
ராமராஜ், விவசாயி, பி.அணைக்கரைப் பட்டி : இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம் காலனி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
கண்மாய் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேலானதால் முட்செடிகள் வளர்ந்து மழை நீரை தேக்க முடியவில்லை. கொட்டகுடி ஆற்றில் இருந்து நீர் வரத்து பாதை கொட்டகுடி ஆறு, அணைப்பிள்ளையார் அணை, இலந்தை தோப்பு களம், சத்திரவிநாயகர் கோயில் ஆறு, சன்னாசிபுரம், சின்ன வாய்க்கால் வழியாக 3 கி.மீ., தூரம் உள்ள ஆற்று பகுதியின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து தென்னை, மா, இலவம் மரங்கள் வைத்துள்ளதால் வரத்து கால்வாய் குறுகலாக மாறி உள்ளது. கொட்டகுடி ஆற்றில் இருந்து கண்மாய்க்கு வரும் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. கண்மாய் தூர்வாராததால் தாசன் செட்டிகுளம் கண்மாயில் நீரை முழுவதும் தேக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு கிராம கமிட்டி மூலம் ரூ. ஒரு லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் கண்மாய்க்கு நீர் வராத நிலை உள்ளது. கொட்டகுடி ஆற்று பகுதியில் இருந்து தாசன் செட்டிகுளம் கண்மாய் வரை முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றிட வேண்டும்.
நீர் பிடிப்பில் ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்
போத்திராஜ், விவசாயி, பி.அணைக்கரைப்பட்டி : கண்மாய் தூர்வரப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலானதால் கண்மாயில் முட்செடிகள், மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
கண்மாய் நீர் பிடிப்பு பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து இலவம், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.
இதோடு கொட்டகுடி ஆற்று பகுதியில் இருந்து தாசன் செட்டிகுளம் கண்மாய் வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கண்மாய் ஆழப்படுத்தி, மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.