டூவீலர் மோதி மூதாட்டி பலி
தேனி: திண்டுக்கல் குமுளி ரோட்டில் போடேந்திரபுரம் விலக்கு அருகே 60 வயது மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக ஆ.துரைராஜபுரம் கஸ்துாரி ராஜா 24, ஓட்டிவந்த டூவீலர் மூதாட்டி மீது மோதியது. மூதாட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வீரபாண்டி வி.ஏ.ஓ., கீதா புகாரில் கஸ்துாரிராஜா மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு
தேனி: அம்மச்சியாபுரம் ஜெயபிரபு. இவரது பாட்டிக்கு சொந்தமான நிலம் அரண்மனைப்புதுார் பள்ளபட்டியில் உள்ளது. அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த சவரிமுத்து நிலம் உள்ளது. நிலம் தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது. இது தொடர்பாக பேச ஜெயபிரபு, பாலசந்தருடன் தேனி பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்றார். பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் வழியில் நின்றிருந்த சவரிமுத்து, இவரது மகள்கள் மரியா, ரெஜீனா, பேரன் சகாயம், பள்ளபட்டி லட்சுமணன், சந்திரன் உள்ளிட்டோர் ஜெயபிரபுவை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயபிரபு புகாரில் தேனி போலீசார் சவரிமுத்து உட்பட 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.