ADDED : ஜூன் 17, 2024 12:07 AM
கணவர் மாயம்: மனைவி புகார்
ஆண்டிபட்டி: க.விலக்கு வைகை அணை ரோட்டில் வசிப்பவர் தெய்வேந்திரன் 36. இவரது மனைவி சங்கீதா 30. எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தெய்வேந்திரன் வேலைக்கு செல்லாமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஜூன் 7ல் மனைவியுடன் தகராறு செய்து வீட்டில் இருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை எடுத்துச் சென்றார். ஜூன் 9 வரை மனைவியுடன் அலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் பின் தொடர்பு கொள்ளவில்லை. தற்போது அவரது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாததால் மனைவி புகாரில், கணவரை க.விலக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
ஆண்டிபட்டி: க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி 60. வைகை அணை ரோட்டில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தார். க.விலக்கு போலீசார், அவரை கைது செய்து, புகையிலைப் பாக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
கஞ்சா விற்பனை: ஐவர் கைது
தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வளையபட்டி குவாரி செல்லும் ரோட்டில் ரயில்வே பாலத்தின் அருகே 6 பேர் நின்றிருந்தனர். அவர் ரூ.500 மதிப்புள்ள 15 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். கோடங்கிபட்டி யுவராஜ் 21, மணிமுத்து 19, ஆனந்தகுமார் 32, தேனி பள்ளிவாசல்தெரு மாதேஸ்வரன் 19, தேனி கோபால்சாமி 22, கம்பம் வடக்குபட்டி குமார் 20, ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் குமாரை தவிர மற்ற ஐவரை போலீசார் கைது செய்தனர்.
டூவீலர் விபத்தில் இருவர் காயம்
தேனி: அம்மாபட்டி முத்தாலம்மன் கோயில் தெரு ஆனந்தகிருஷ்ணன் 36. இவர் மகன் சபரிகிருஷ்ணனுக்கு 7, வடபுதுப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள கடையில் பள்ளிக்கு தேவையான உடை, பொருட்கள் வாங்கிவிட்டு, வீட்டிற்கு டூவீலரில் திரும்பினர்.
அம்மாபுரம் நான்கு ரோடு சந்திப்பில் வேகத்தடை அருகே இவர்கள் பின்னால் அம்மாபட்டி வீரையா 24, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் ஆனந்தகிருஷ்ணன், அவரது மகன் சபரிகிருஷ்ணன் காயமடைந்தனர்.
இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.