கழிவுகளை தீ வைத்த விவசாயி பலி
தேனி: தேனி ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் விநாயகர் கோயில் தெரு விவசாயி பெருமாள்சாமி 78. இவர் ஆக., 2ல் மாலை 5:00 மணியளவில் தோட்டத்தில் உள்ள மக்காச்சோளத்தின் கழிவுகளை தீ வைத்தார். அப்போது காற்றின் சுழற்சியால் தீ பற்றி அதிக புகை உண்டானது. இதனால் பெருமாள்சாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கிய எரிந்து கொண்டிருந்த தீயில் தவறி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் பணிபுரிந்த ராஜேந்திரன், மேலும் சிலர் தேனி தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகன் ராஜ்குமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்திய மாணவர் உட்பட இருவர் கைது
தேனி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் கொடுவிலார்பட்டி அருகே ரோந்து சென்றனர். அப்போது ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுார் இந்திராநகர் பாண்டி 35. இவர் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் பிரவீன்குமாரை 21, தனது டூவீலரில் பின்னால் அமர வைத்து சென்றனர். போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்து அவர்களிடம் 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இருவரும் சேர்ந்து ஆண்டிபட்டி மஞ்சக்காரன்பட்டியை சேர்ந்த கணேசனிடம் கஞ்சாவை வாங்கி பள்ளிக் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். அதன்படி மதுவிலக்கு போலீசார் பாண்டி உட்பட மூவர் மீது கஞ்சா கடத்தல் வழக்குப்பதிந்து பாண்டி, பிரவீன்குமாரை கைது செய்து, தலைமறைவாக இருக்கும் கணேசனை தேடி வருகின்றனர். இதில் பிரவீன்குமார் கல்லுாரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.