பார் ஊழியரை குடை கம்பியால் குத்திய மதுபிரியர்
தேனி: பழனிசெட்டிபட்டி ஊட்டி பங்களா தெரு கார்த்திக் 40. அரசு மதுபாரில் வேலை பார்க்கிறார். அதேப்பகுதியை சேர்ந்த சிவபாலன். இவர், கார்த்திக் பணிபுரியும் பாரில் அடிக்கடி மது குடித்தார். இதில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இருவரும் இணைந்து பணம் வைத்து சீட்டு விளையாடுவது வழக்கமானது. இந்நிலையில் சிவபாலன் சீட்டு விளையாட்டில் பணத்தை இழந்தார். கோபத்தில் இருந்தவர், கார்த்திக் பணிபுரியும் மதுபார் அருகே நின்று அவரை தகாத வார்த்தையில் திட்டி குடை கம்பியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்
தேனி: பொம்மையக் கவுண்டன்பட்டி வெள்ளைச்சாமி. இவரது மனைவி அனுசுயாதேவி. இவர்களது 17 வயது மகள், தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., படித்து வந்தார். வீட்டில் இருந்து மாணவி மாயமானார். உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவியின் தாய் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மோதி விவசாயி காயம்
தேனி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காமனுார் நாகராஜன் 43. விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெரியகுளம் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.
அவர் மீது தே. கள்ளிபட்டி சுகுமார் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில், நாகராஜன் காயமடைந்தார். சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். நாகராஜன் மனைவி உமாமகேஸ்வரி புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியார் ஐ.டி.ஐ., மாணவி மாயம்
ஆண்டிபட்டி: பந்துவார்பட்டி பாலமுருகன். இவரது மகள் சுசிலா 19. இவர் ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரத்தில் செயல்படும் தனியார் ஐ.டி.ஐ., யில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இரு நாட்களுக்கு முன் ஐ.டி.ஐ., செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். மாலையில் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வில்லை. சுசிலா படிக்கும் நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது, அவர் கல்லூரி நேரம் முடிந்த பின் அங்கிருந்து சென்று விட்டதாக கூறினர். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாலமுருகன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
ஆண்டிபட்டி: ராஜதானி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். மஞ்சிநாயக்கன்பட்டி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் பிடிபட்ட நபர் மேலக்கூடலூரை சேர்ந்த கார்த்திக் 31, என்பதும் கஞ்சாவை சித்தார்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் 29, ராம்குமார் 28, ஆகியோர் மூலம் விற்பனை செய்ய இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த ராஜதானி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச்செயின் வழிப்பறி
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வி.ஆர்.பி., நாயுடு தெரு ராதாகிருஷ்ணன் மனைவி பேபி 73. இவர் அரண்மனைத் தெருவில் தனியார் மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.
அப்போது மூதாட்டியின் பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர் பேபி, அணிந்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்றார். வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் விசாரிக்கிறார்.