ADDED : ஏப் 12, 2024 06:06 AM
போடி: தேர்தல் என்றாலே திருவிழா போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக இருக்கும். அலரும் ஸ்பீக்கர், வாகன பிரசாரம், கட்சி காரியாலயம் அமைக்கப்படும். அதிகாலை ஓட்டு சேகரிப்பதற்காக திரளும் கூட்டத்திற்கு காபி, ஓட்டல்களில் காலை டிபன், மதிய உணவு, இரவு டிபன் மட்டும் இன்றி கவனிப்பும் களைகட்டும். ஓட்டு சேகரிக்கும் வேட்பாளரை பட்டாசு வெடித்து மேளதாள வரவேற்பு, நடன கலைஞர்களின் குத்தாட்டம் என தேர்தல் திருவிழா உற்சாகமாக நடக்கும். தேர்தல் கமிஷன் கெடுபிடியால் செலவு,ஆடம்பரங்கள் குறைந்தது.
கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தொகுதியில் மும்முனை போட்டியில் பிரசாரம் மந்தமாகவே உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை பழக்கப்படுத்தியதால் வேட்பாளரோ, கட்சி நிர்வாகிகளோ, ஓட்டு கேட்க சென்றாலே, எப்போது கவனிப்பு என்கின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் ரூ. 500 ம், சில இடங்களில் ரூ.1000 வரை இருந்தது. இந்நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பெரும் தொகை செலவிட வேண்டும் என்பதால், அத்தியாவசிய செலவுகளை தவிர மற்ற செலவை வேட்பாளர்கள் குறைத்து வருகின்றனர்.
வேட்பாளர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்தால் போதும். தொண்டர்களையோ, ஓட்டு சேகரிப்புக்காக காசு கொடுத்து மக்களையோ அழைத்து வர வேண்டாம் என்கின்றனர். இதனால் பிரச்சார களம் களை கட்டவில்லை என்கின்றனர்.

