/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவை கண்டித்து லோயர்கேம்பில் மறியல்; பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் பிரச்னை
/
கேரளாவை கண்டித்து லோயர்கேம்பில் மறியல்; பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் பிரச்னை
கேரளாவை கண்டித்து லோயர்கேம்பில் மறியல்; பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் பிரச்னை
கேரளாவை கண்டித்து லோயர்கேம்பில் மறியல்; பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் பிரச்னை
ADDED : மே 27, 2024 10:15 PM

கூடலுார் : தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில், 2 லட்சத்து 17,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆக, 152 அடி உயரம் கொண்ட அணையை கேரளா, 1979ல் பலவீனமடைந்து விட்டது எனக்கூறி நீர்மட்டத்தை, 136 அடியாக நிலை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து, 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால், நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து, 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
புதிய அணை கட்ட முடிவு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து, ஒவ்வொரு முறையும் அணை 142 அடியாக உயரும் போதும், புதிய அணை என்ற கோரிக்கையை முன்வைத்து கேரளா பிரச்னை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் அணைக்கு 360 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவதற்கும், புதிய அணை கட்டியபின் முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கேரளா மனு தாக்கல் செய்து மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டம்
பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், செயல் தலைவர் சலேத்து தலைமையில் நேற்று கேரள அரசைக் கண்டித்து லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமுளி நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.
மலைப்பாதையில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் உட்பட பல சங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியது தவறு.
கேரளா புதிய அணை கட்டுவதாக கூறப்படும் இடம் பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் இருப்பதால் தேசிய புலிகள் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவின் மனுவை பரிசீலிக்க கூடாது.
இன்று மே 28, டில்லியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு நடத்தும் அணை தொடர்பான ஆய்வை நிறுத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவின் எந்த மனுவையும் பரிசீலிக்க கூடாது. இவ்வாறு கூறினார்.