/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வங்கி மேலாளருக்கு ஆன்லைன் பணி வழங்கி ரூ.41.92 லட்சம் 'ஸ்வாஹா'
/
வங்கி மேலாளருக்கு ஆன்லைன் பணி வழங்கி ரூ.41.92 லட்சம் 'ஸ்வாஹா'
வங்கி மேலாளருக்கு ஆன்லைன் பணி வழங்கி ரூ.41.92 லட்சம் 'ஸ்வாஹா'
வங்கி மேலாளருக்கு ஆன்லைன் பணி வழங்கி ரூ.41.92 லட்சம் 'ஸ்வாஹா'
ADDED : ஜூன் 26, 2024 11:01 PM
தேனி:தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சீப்பாலக்கோட்டை ரோட்டைச் சேர்ந்தவர் விஸ்வேஸ்வரன், 59. தேனி தனியார் வங்கி மேலாளரான இவரை, 2024 மே 30ல் டெலிகிராம் செயலியில் தொடர்பு கொண்ட நபர், 'வீட்டிலிருந்து பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிக்கலாம்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பினார்.
இதற்கு, மேலாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். அந்நபர் டெலிகிராமில் அனுப்பிய www.clevertapindia.com, www.clevertaporder.com என்ற இணையதளத்தில் வங்கி மேலாளர் தன் சுய விபரங்களான கே.ஒய்.சி.,யை பதிவு செய்துள்ளார்.
பின் பகுதி நேர பணியாக இணையத்தில் கூறப்பட்ட அப்ளிகேஷன்களை 'லைக்' செய்து, 'ரேட்டிங்' தர வேண்டும் என்பது மேலாளரின் தினசரி பணி என தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், 10,000 ரூபாயை வங்கி மேலாளரின் ஆன்லைன் வங்கி கணக்கிற்கு மாற்றி அதனை ஆன்லைன் வாலட்டில் இருக்கும்படி செய்துள்ளனர். பின் முதற்கட்ட லாபமாக வங்கி மேலாளரின் கணக்கிற்கு, 1,140 ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பின் வாலட்டில் பணம் குறைந்தால் ரீசார்ஜ் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இவற்றை நம்பிய வங்கி மேலாளர் விஸ்வேஸ்வரன், 2024 ஜூன் 6 முதல் 2024 ஜூன் 12 வரை ஏழு நாட்களில் 14 தவணைகளில், 41 லட்சத்து 92,736 ரூபாயை தன் வங்கிக்கணக்கில் இருந்து வாலட்டில் செலுத்தியுள்ளார்.
பின் லாபமாக கிடைத்த பணத்தை, வங்கிக்கணக்கிற்கு மாற்றும் போது மாற்ற முடியவில்லை. டெலிகிராமில் சம்பந்தப்பட்ட நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் வங்கி மேலாளர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
அவரது புகாரின்படி, தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிந்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.