ADDED : ஜூன் 27, 2024 04:50 AM
பெரியகுளம், : பெரியகுளம் தாலுகாவில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சிண்டிகேட் அமைத்து வராகநதியில் மணல் கொள்ளை அமோகமாகநடக்கிறது.
பெரியகுளத்தைச் சுற்றி வராகநதி, கல்லாறு, பாம்பாறு, செழும்பாறு, மஞ்சளாறு போன்ற ஆறுகளும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் செல்கின்றன. ஆறு, சிற்றோடைகள் மூலம் வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையால் நீர்நிலைகள் மணல் படிமங்கள் குறைந்து பள்ளம், மேடாக கட்டாந்தரையாக நீர்நிலைகள் காட்சித்தருகின்றன. ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்லும் போது குளிப்பவர்கள் மணல் பகுதி சீராக இல்லாததால் பள்ளம், மேடுகளில் சிக்குகின்றனர்.
வராகநதியில் போலீஸ் குடியிருப்பு பின்புறம், தண்டுப்பாளையம், வடுகபட்டி வராகநதி பகுதி உட்பட பல பகுதிகளில் மணல் திருட்டு நடக்கிறது. ஏழுக்கும் அதிகமான பாலங்களில் தாங்கும் துாண்கள் பலமிழந்து காணப்படுகின்றன. வராகநதி கரையோர பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த மணல் திருட்டுக்கு உடந்தையாக உள்ளனர்.
மணலை யூனிட் கணக்கில் விலைபேசி இரவில் ஒரு டிராக்டர் மணல் ரூ.12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால்மணல் அள்ளுபவர்கள் சிண்டிகேட் அமைத்து மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். வருவாய்த்துறை, போலீசார் இணைந்து மணல் திருட்டைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-