/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழை இலை பயன்படுத்த மாணவர்களுக்கு விழிப்பணர்வு
/
வாழை இலை பயன்படுத்த மாணவர்களுக்கு விழிப்பணர்வு
ADDED : செப் 02, 2024 12:20 AM

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் உண்டு. இருப்பினும் இவை அனைத்தையும் முறியடித்து மரங்கள் மட்டுமே காற்றில் இருந்து வரும் துாசுகளை தடுக்கிறது. நிலத்தடி நீரை தூய்மைப் படுத்துவதில் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மரங்கள் வளர்ந்து மண் வளம் பாதுகாக்கப் பட்டாலே மனிதன் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் பொருளாதார வளர்ச்சி அடையலாம் என்பதை மாற்றி சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியாக இருக்க பசுமை கட்டடங்கள், பசுமைக் கொள்கை, தண்ணீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.
பள்ளிகளில் நாள்தோறும் தனியாக நேரம் ஒதுக்கி மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரங்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள், தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து விளக்க வேண்டும்.
மேலும் சுற்றுச்சூழல் குறித்த கல்வி தற்போதைய மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தரும் கல்வி எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற பெரிதும் உதவும்.
ஏனெனில் மாணவர்கள் பெற்றோர்கள் கண்காணிப்பில் வீட்டில் இருக்கும் நேரத்தைக் காட்டிலும் பள்ளியில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். அந்த நேரத்தில் சுகாதாரம் குறித்த கல்வி பெரிதும் பயன்படும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளி.
இயற்கையை பாதுகாப்பு
பால கார்த்திகா, முதல்வர், ஆர்.எஸ்.கே.நர்சரி பள்ளி, கூடலுார்: பள்ளியில் மரக்கன்றுகள் நடவு செய்து சிறு வயது முதலே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பள்ளிக்குள் வரும் மாணவர்கள் அடர்ந்த மரங்களுடன் குளுமையான சீதோஷ்ன நிலை இருப்பதால் படிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவது தொடர்கிறது. அனைத்து வீடுகளிலும் துளசி செடி கண்டிப்பாக வளர்க்க வேண்டும். இதில் கூடுதல் ஆக்சிஜன் உருவாகிறது. கடுமையான வெப்பத்தில் ஆக்சிஜன் குறைபாட்டால் சிரமம் அடையும் மக்களுக்கு துளசி அதிகம் பயன்படுகிறது.
இயற்கை இருந்தும் நாம் இறப்பதற்கு காரணம், இயற்கை இறந்து கொண்டிருப்பதுதான். இதயம் இல்லாத இயற்கை, நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இதயம் இருந்தும், நாம் ஏன் இயற்கையை அழித்துக் கொண்டு வருகிறோம். இயற்கையை பாதுகாத்தாலே மாசில்லா கூடலுாரை உருவாக்க முடியும்., என்றார்.
வாழை இலை பயன்பாடு
லதா, ஆசிரியை, ஆர்.எஸ்.கே. பள்ளி, கூடலுார்: இயற்கை பேரழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது பாலிதீன் பைகள். இதை பயன்படுத்தாமல் தடுக்க மீண்டும் வாழை இலைகளை பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.
தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மண்பானை, சில்வர் பாத்திரம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
சந்தைக்குச் செல்லும்போது கூடைகள், துணிப் பைகள் போன்றவற்றை உபயோகிப்பது நல்லது. இந்த பூமி நம்முடைய தாய் போன்றது. அதனை பாதுகாப்பதும், வளமையாக்குவதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். நம்முடைய நாட்டில் ஏராளமான நன்மை வாய்ந்த இயற்கைப் பொருட்கள் உள்ளன. அதனை பயன்படுத்துவோம். பாலிதீன் பைகளை ஒழிப்போம்.
இதுபோன்ற விழிப்புணர்வுகளை பள்ளி குழந்தைகளிடமிருந்து துவக்குவதே தீர்வாகும்., என்றார்.