/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
/
போடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
போடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
போடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
ADDED : மார் 02, 2025 05:27 AM
போடி: போடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
போடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1800க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 100 பேர் உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம் மருத்துவமனைக்கு போடி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், கேரளாவை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு 19 டாக்டர்கள் பணிபுரிய வேண்டியதில் 12 பேர் மட்டுமே உள்ளனர். ஏழு டாக்டர்கள் பணியிடம் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது.
இது தவிர கண் மருத்துவ உதவியாளர், குடும்ப நலப் பிரிவில் நர்சிங் உதவியாளர்கள், மருந்து கட்டுபவர், மருத்துவ உதவியாளர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய துப்புரவு பணியாளர்களும் இல்லை. இதனால் சிகிச்சைக்கு வருவோர் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பிரசவ நேரத்தில் அச்சம்
கண் மருத்துவ உதவியாளர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதால் கண் பரிசோதனை செய்ய முடியாமல் தனியாரிடம் செல்கின்றனர். மருத்துவமனையில் மின்வயரிங் செய்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அலுமினிய வயர்கள் சேதமடைந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. ஜெனரேட்டர் இருந்தும் வயரிங் பழுதால் பயன்படுத்த முடிவதில்லை. எலக்ட்ரீசியன் பணியிடம் காலியாக உள்ளதால் மின் பழுதை அவசரத்திற்கு சரி செய்ய முடிவதில்லை. இதனால் பிரசவ நேரத்தில் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது.
இதனால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என கருதி கர்ப்பிணிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரை செய்ய வேண்டியுள்ளது. போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் வளாகத்தில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பிளம்பர் இல்லாததால் குடிநீர் குழாய், போர்வெல் ஏற்படும் பழுதை உடனே சரி செய்ய முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
காவலாளிகள் இல்லாததால் திறந்த வெளி மருத்துவமனையாக உள்ளது. இதனால் மாடு, நாய், கழுதைகள் தாராளமாக உலா வருகின்றன. நோயாளிகள் நலன் கருதி டாக்டர் பணியிடங்களையும், நர்சிங் உதவியாளர், மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன், துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நலப் பணிகள் இயக்குநர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.