/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
/
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஆக 08, 2024 05:30 AM

கூடலுார்: மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
உலக மக்களை காப்பாற்றுவதற்காக அம்பாள் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூர விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஆண்டாள் அவதரித்த தினம் ஆடித் திங்களில் வரும் பூர நாள் ஆகும். பூமாதேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என புராணங்கள் கூறுகின்றன. சித்தர்களும் முனிவர்களும் இந்நாளில் தான் தங்களுடைய தவத்தை துவக்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆடிப்பூர விழா அம்மன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கூடலுார் வீருகண்ணம்மாள் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அம்மன் பாடல்கள் பாடினர்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மந்தை அம்மன் கோயில், துர்க்கை அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசாமி கோயில் வளாகத்தில் உள்ள மாகாளி அம்மனுக்கு பக்தர்கள் வளையல், எலுமிச்சை பழங்களால் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெரியகுளம்:- கவுமாரியம்மன் கோயிலில் அம்மன், பாலசுப்பிரமணியர் கோயிலில் அறம் வளர்த்த நாயகி அம்மன்,
அழகுநாச்சியம்மன், காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், பள்ளத்து காளியம்மன் கோயில்களில் அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர். தென்கரை உத்தமகாளியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பஜார்வீதி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சன அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஆண்டாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் ஆண்டாள், சீனிவாசப் பெருமாள் நகர்வலம் வந்தனர். போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன், கோயில், தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
தேனி: பங்களாமேடு டி.பி., மேற்கு தெரு நாகராணி நாகம்மாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை கணபதி ஹோமம் நடந்தது.
வளையல் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வளைகாப்பு நடத்தப்பட்டது. அம்மனுக்கு சகஸ்ர தீபாரதனை நடந்தது. மாலை கஜ வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேனி நகர்பகுதி, பாரஸ்ட்ரோடு, சடையால் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
பூஜைகளை தொடர்ந்து நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.