/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உழவர் சந்தையில் கடைகளை அதிகரிக்க நடவடிக்கை தேவை
/
உழவர் சந்தையில் கடைகளை அதிகரிக்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 18, 2024 03:52 AM
சின்னமனுார் : சின்னமனுார் உழவர் சந்தையில் கடைகளை அதிகரித்து பொது மக்கள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேளாண் விற்பனை துறை முன் வர வேண்டும்.' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், தேனி, சின்னமனுார், கம்பம் ஆகிய ஊர்களில் உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் தேனி, கம்பம் உழவர் சந்தைகள் மட்டுமே அதிக காய்கறிகளை கையாள்கின்றன. 50 க்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து தினமும் 30 முதல் 40 டன் வரை காய்கறிகளை விற்பனை செய்கிறது.
பிற ஊர்களில் பெயரளவிற்கு உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. குறிப்பாக சின்னமனுாரில் 12 கடைகள் மட்டுமே உள்ளன.
உழவர் சந்தைக்கு வெளியில் அதிக கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. உழவர் சந்தைக்குள் உள்ள கடைகளில் விற்கப்படும் விலையை காட்டிலும், வெளிக்கடைகளில் விலை குறைந்து வழங்கப்படுகிறது. இதனால் உழவர்சந்தைக்கு பொது மக்கள் செல்வது குறைந்து வருகிறது.
இத்தனைக்கும் இங்கு காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் உள்ளது.
கம்பம் உழவர் சந்தை அதிகாரிகள் சின்னமனுார் மொத்த மார்க்கெட்டில் விலை கேட்டு தான் நிர்ணயம் செய்கின்றனர். ஒரு நாளைக்கு 100 முதல் 200 டன் வரை மொத்த மார்க்கெட்டில் வரத்து உள்ளது.
ஆனால் அதிக காய்கறி உற்பத்தி, வரத்து, விற்பனை செய்வதற்கு உரிய வாய்ப்பு இருந்தபோதும், நாளுக்கு நாள் விற்பனை குறைந்து வருகிறது.
மேலும் உழவர் சந்தை வாசல் படியில் காய்கறி கழிவுகள், குப்பை குவித்து வைக்கப்படுகிறது.
இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
எனவே சின்னமனுார் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து, கூடுதல் கடைகளை ஏற்படுத்தி, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்த, வேளாண் விற்பனை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.