ADDED : ஆக 09, 2024 02:09 AM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து, நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் 131.20 அடி வரை உயர்ந்தது. (மொத்த உயரம் 152 அடி).
கனமழை காலங்களில் அணைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்து, தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு குறித்து அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டது.
மெயின் அணை, பேபி அணை, மண் அணை, நீர்க்கசிவு காலரி, உபரி நீர் வெளியேறும் ஷட்டர்கள், நிலநடுக்கத்தை கண்டறியும் சீஸ்மோகிராப், நில அதிர்வை கண்டறியும் ஆக்சிலரோ கிராப், மழைமானி, வெப்பமானி, அனிமோ மீட்டர் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொறியாளர்கள் அணைப்பகுதியில் தங்கி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.