/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடையும் தற்காலிக உழவர் சந்தை கடைகள்
/
சேதமடையும் தற்காலிக உழவர் சந்தை கடைகள்
ADDED : ஜூலை 01, 2024 06:45 AM

தேனி : ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சார்பில், கொரோனா காலத்தில் ரூ.28 லட்சம் மதிப்பில் தற்காலிக உழவர் சந்தை பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தகர கடைகள் துருப்பிடித்து வீணாகி வருகிறது.
2020ல் கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வலியுறுத்தினர். இதனால் உழவர் சந்தை, வாரசந்தைகள் மூடப்பட்டன. பொது மக்களுக்கு காய்கறி வாங்க போதிய இடவசதி உள்ள இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன.
அப்போது தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில், தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டது. அங்கு ஊராட்சி பொது நிதி ரூ. 28 லட்சத்தில் 68 கடைகள் தகரத்தால் அமைக்கப்பட்டன. கொரோனா காலத்தில் கடைகள் பயன்படுத்தப்பட்டன.
கொரோனா தாக்கம் முடிந்ததும், நகர் பகுதியில் உழவர் சந்தை, வாரச்சந்தை, காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்பட துவங்கின.
நகர்பகுதியில் இருந்து 2 கி.மீ.,க்கு துாரத்தில் அமைந்துள்ள தற்காலிக சந்தை செயல்பாடு இன்றி முடங்கியது. இந்த சந்தை 3 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது.
தற்போது புதர்மண்டியுள்ளது. மேற்கூரை, பக்கவாட்டு தடுப்புகள் தகரம் என்பதால் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து துருப்பிடித்து சேதமாகி வருகிறது. இதனால் ரூ. 28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தகர கடைகள் வீணாகி வருகிறது. இக்கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வேறு இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சித் தலைவர் பாண்டியம்மாள் கூறுகையில், 'கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தை கடைகளை தினசரி சந்தையாக இயக்க முந்தைய கலெக்டர் முரளிதரனிடம் மனு வழங்கினோம்.
தற்போது மொத்த மார்கெட்டாக இயக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு வழங்க உள்ளோம். அல்லது அதனை வேளாண் துறையினர் பயன்படுத்தி கொள்ள கேட்க உள்ளோம்' என்றார்.