/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு துவங்கியது
/
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு துவங்கியது
ADDED : மார் 03, 2025 06:42 AM

தேனி: மாவட்டத்தில் நேற்று காலை முதல் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் நிறைவேற்றும் இறை கடமையான புனித ரம்ஜான் நோன்பை துவக்கினர்.
இஸ்லாமியர்களின் பிரதான ஐந்து கடமைகளில் ரம்ஜான் நோன்பு வைப்பது பின்பற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ரம்ஜான் மாதம் துவங்கிய நாளில் இருந்து ரம்ஜான் நோன்பு 30 நாட்கள் கடைப்பிடிப்பார்கள்.
ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் கடைசி நாளில் தான் 'ஈத்' என்னும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் சூரிய உதயம் தொடங்கியது முதல் அஸ்தமாகும் வரை தண்ணீர், உணவு என எதுவும் சாப்பிடாமலும், பிற பாவச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும் ரம்ஜான் நோன்பின் முக்கிய அம்சமாகும். அதிகாலை 5:30 மணிக்குள் நோன்பை துவங்கி மாலை 6:30 மணிக்கு நிறைவு செய்வார்கள்.
இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நேற்று முதல் துவங்கியதை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு ஒரு மாதம் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். அதிகாலை சாப்பிட்ட பின் மாலை சூரியன் மறையும் வரை எதையும் சாப்பிடாமல், நீர், உமிழ்நீர் கூட விழுங்காமலும் இருப்பார்கள். பின் மாலையில் நோன்பு கஞ்சி திறப்பது வழக்கம்.
தேனி
அல்லிநகரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், கம்பம் ரோடு பெரிய பள்ளிவாசல், சுப்பன்செட்டிதெரு புதுப்பள்ளிவாசல்களில் புனித ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் நடந்தன.
போடி
நேற்று போடி முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் புனித ரம்ஜான் மாதத்தின் முதல் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தலைவர் தங்கப்பா தலைமையில் நடந்தது. அதன் பின் சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கம்பம்
நேற்று உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல், கம்பம் வாவேர் பள்ளிவாசல்களில் அதிகாலையில் திரளாக இஸ்லாமியர்கள் திரண்டு நோன்பைதுவக்கினர்.