/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சவுக்கு சங்கருக்கு கஞ்சா வாங்கிக்கொடுத்தவர் கைது
/
சவுக்கு சங்கருக்கு கஞ்சா வாங்கிக்கொடுத்தவர் கைது
ADDED : மே 06, 2024 11:26 PM

தேனி: தேனி தங்கும் விடுதியில் இருந்து மூணாறு செல்ல இருந்த யூ டியூபர் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர், கார் டிரைவர் உட்பட மூவருக்கு கஞ்சா வாங்கி கொடுத்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா ஆரைக்குடி வடக்குத்தெரு மகேந்திரனை 24, பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
தேனி பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை மே 5 அதிகாலை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரது காரை தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இருந்த அரை கிலோ கஞ்சா, மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.
சவுக்கு சங்கருடன் தங்கியிருந்த சென்னை நுங்கம்பாக்கம் ராம்பிரபு, பரமக்குடி ராஜரத்தினத்தை போலீசார் விசாரித்தனர். காரில் பறிமுதல் செய்த கஞ்சாவை, நடமாடும் தடய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்து கஞ்சா கடத்தியதை உறுதிப்படுத்தி சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் மூவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கும் பதிவு செய்தனர்.
சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படட நிலையில் ராமபிரபு, ராஜரத்தினம் ஆகியோரை மட்டும் கஞ்சா கடத்தல் வழக்கில் போலீசார் மே 4ல் கைது செய்தனர்.
விசாரணையின்படி சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவருக்கும் கஞ்சா வாங்கி கொடுத்த மகேந்திரனை 24, நேற்று போலீசார் கைது செய்தனர்.