ADDED : ஆக 02, 2024 11:31 PM
ஆண்டிபட்டி:பெரியாறுஅணையில் இருந்து வரும் நீரால் வைகை அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. கடந்த சில வாரங்களில் தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை அணைக்கு எதிர்பார்த்த நீர் வரத்து கிடைக்கவில்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர் மட்டும் வைகை அணைக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
வைகை அணை நீர்மட்டம் ஜூலை 3ல் 51.71 அடியாக இருந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 300 கன அடியாக வெளியேறிய நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரால் வைகை அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. ஜூலை 26ல் 54.35 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 56.20 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1647 கனஅடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி வீதம் வழக்கம் போல் வெளியேறுகிறது. நீர் வெளியேற்றத்தை விட வரத்து அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்கிறது.