ADDED : செப் 18, 2024 03:57 AM

மூணாறு : இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே சதுரங்கபாறை ஆடுகிடத்தான் பகுதியில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரை கலால்துறையினர் கைது செய்தனர்.
சதுரங்கப்பாறை ஆடுகிடத்தான் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அடிமாலி கலால்துறை போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் ராகேஷ் பி. சிரயத் தலைமையில் நடந்த பரிசோதனையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா சிக்கியது.
இதுகுறித்து ஆடுகிடத்தான் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் 19, தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் 21, குப்பிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கோகுல்பாண்டிசுரேஷ் 22, ஆகியோரை கைது செய்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கொலை, கஞ்சா, வாகன திருட்டு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், தேனி மாவட்டத்தில் இருந்து காட்டு வழியாக நடந்து, கஞ்சா கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

