ADDED : செப் 08, 2024 04:55 AM

ஆண்டிபட்டி: விளைந்த தக்காளி பழத்திற்கு விலை கிடைக்காததால் ஆண்டிபட்டி பகுதியில் விவசாயிகள் பலரும் தக்காளி பழங்கள் பறிப்பை நிறுத்தி விட்டனர். இதனால் விளைந்த தக்காளி செடிகளுடன் வீணாகி வருகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் ராஜதானி, சித்தார்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, டி.புதூர், அணைக்கரைப்பட்டி, குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி உட்பட பல கிராமங்களில் இறவை பாசனத்தில் காய்கறிகள் சாகுபடி அதிகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால் மூன்று மாதத்திற்கு முன்பு விவசாயிகள் பலரும் தக்காளி நடவு செய்தனர். இதனால் ஒரு மாதமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் விளையும் தக்காளி திண்டுக்கல், மதுரை, சென்னை மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படும்.
தற்போது அனைத்து இடங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகமானதால் விலை கிடைக்கவில்லை.
விவசாயிகள் கூறியதாவது: பல ஆயிரம் செலவு செய்து தக்காளி நடவு செய்து, உரம், பூச்சி மருந்து தெளித்து பராமரித்த செடிகளில் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. விலை கிடைக்கவில்லை. கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கணக்கிட்டால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பலரும் செடிகளில் தக்காளி பறிப்பை தவிர்த்து விட்டனர். தக்காளி செடிகளில் களை எடுப்பு, உரமிட்டு பராமரிப்பும் இல்லை. விலை உயர்ந்தால் மீண்டும் தக்காளி பறிப்பை தொடரலாம் என்ற நம்பிக்கையில் விளை நிலங்களில் தக்காளி செடிகளை அப்படியே விட்டுள்ளனர் என தெரிவித்தனர்.