/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சந்தை பாதை அடைபட்டதால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி ஏத்தக்கோயில் ரோட்டில் இருந்து வாரச்சந்தைக்கு ரோடு அவசியம்
/
சந்தை பாதை அடைபட்டதால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி ஏத்தக்கோயில் ரோட்டில் இருந்து வாரச்சந்தைக்கு ரோடு அவசியம்
சந்தை பாதை அடைபட்டதால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி ஏத்தக்கோயில் ரோட்டில் இருந்து வாரச்சந்தைக்கு ரோடு அவசியம்
சந்தை பாதை அடைபட்டதால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி ஏத்தக்கோயில் ரோட்டில் இருந்து வாரச்சந்தைக்கு ரோடு அவசியம்
ADDED : மார் 09, 2025 03:59 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோட்டில் ரயில்வே பாலம், தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதால் அப் பகுதியில் இருந்து வாரச்சந்தை, கடை வீதிக்கு செல்லும் பாதை அடைபட்டதால் பத்து கிராம மக்கள் சிரமம் அடைகின்றனர்.
ஆண்டிபட்டிக்கு வரும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாகனங்கள் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட், மெயின்ரோடு வழியாக வாரச்சந்தை, கடைவீதிக்கு செல்கின்றனர். இதனால் ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோடு, மதுரை மெயின் ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மீண்டும் இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் பாதை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பொதுமக்கள் கருத்து:
பேரூராட்சி மாற்றுபாதைக்கு முயற்சிக்கவில்லை
அய்யாவு, ஏத்தக்கோவில்: ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும் ஆண்டிபட்டி வார சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். வாரச்சந்தையில் காலையில் நடைபெறும் ஆட்டுச் சந்தை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏத்தக்கோவில், சித்தயகவுண்டன்பட்டி, ரெங்கராம்பட்டி, அனுப்பப்பட்டி, மறவபட்டி, மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி, ஆண்டிபட்டி பாலாஜி நகர் உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சந்தை பாதையை பயன்படுத்தினர்.
இதனால் நகர் பகுதியை கடந்து செல்லாமல் எளிதில் வார சந்தை கடைவீதிக்கு சென்று திரும்ப முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக பாதை அடைபட்டதால் ஆண்டிபட்டி நகர் பகுதிக்குள் சென்று சிரமப்படுகின்றனர்.
ரயில்வே பாலம் அமைக்கப்பட்ட போதே அடைபட்ட பாதைக்கு மாற்று பாதை உருவாக்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சிக்கவில்லை. இதனால் தற்போது ஆண்டிபட்டி நகர் பகுதியில் நெருக்கடியால் பலரும் தவிக்கின்றனர்.
நெருக்கடிக்குள்ளாகும் விவசாயிகள்
ஜேம்ஸ்பால் துரைராஜ்: ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளி, ஆசிரியர் பயிற்சி மையம், ஒருங்கிணைந்த வேளாண்துறை அலுவலகம் செயல்படுகிறது.
ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலர் சந்தைப்பாதை வழியாக நெருக்கடி இல்லாமல் எளிதில் சென்று வந்தனர்.
கிராமங்களில் இருந்து வரும் விவசாயிகள் விளை பொருட்களை வாரச்சந்தைக்கும் நகருக்குள் எளிதில் கொண்டு சென்றனர். பாதை அடைபட்டபின் அனைவரும் ஒரு கி.மீ., தூரம் சுற்றி நெருக்கடியான நகர் பகுதியை கடந்து செல்கின்றனர்.
போக்குவரத்து நெருக்கடியில் இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் எளிதில் சென்று வர முடியவில்லை. இப்பகுதியில் மீண்டும் புதிய பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபை குழுவிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை
ரேணுகா, கவுன்சிலர், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி - ஏத்தக்கோவில் ரோட்டில் இருந்து வாரச்சந்தை பாதை தனியார் இடத்தின் வழியாக சென்றதால் பொதுமக்களுக்கு அடிக்கடி பிரச்னையும் ஏற்பட்டது.
இந்நிலையில் ரயில்வே சுரங்க பாலம் கட்டப்பட்ட போது பாதை அடைபட்டது. கருப்பசாமி கோயில், கோழிப்பண்ணை தெருவில் உள்ள பாலம் வழியாக நாடார் தெரு, வாரச்சந்தை பகுதிக்கு அங்குள்ள ஓடையின் கரை பகுதி வழியாக பாதை அமைக்க இட வசதி உள்ளது. 300 மீட்டர் நீளம் 20 அடி அகலத்தில் பாதை அமைக்க முடியும். ஏத்தக்கோவில் ரோட்டில் இருந்து வாரச்சந்தை, கடைவீதிக்கு அனைவரும் எளிதில் சென்று திரும்பலாம். இந்த பாதை அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தேனி மாவட்டத்திற்கு வந்திருந்த சட்டமன்ற குழுக்களிடமும் இதுகுறித்து மனு கொடுக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை.
பாதை அமைத்தால் நெருக்கடி குறையும்
தீர்வு: இந்த பாதை அமைவதால் ரயில்வே பாலத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி குறையும். ஒரு கி.மீ.,தூரம் சுற்றிச் செல்ல தேவை இல்லை.
மாவட்ட நிர்வாகம் பாதை அமைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கினால் ஆண்டிபட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை ஓரளவு தவிர்க்க முடியும்.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இது குறித்த விபரங்களை அரசின் கவனத்திற்கு அவசியம் கொண்டு செல்வதால் விரைவில் தீர்வு கிடைக்கும்.